சூளகிரியில் ரூ.10 லட்சம் பணம் கத்தியை காட்டி பறிப்பு? – பெண் உள்பட 5 பேர் மீது நடவடிக்கை கோரி எஸ்.பி.யிடம் புகார்

கிருஷ்ணகிரி, செப். 2:
கிருஷ்ணகிரியில் அடகு வைத்திருந்த தங்க நகைகளை மீட்பதற்காக கொண்டு வந்த ரூ.10 லட்சம் பணத்தை கத்தியை காட்டி மிரட்டி பறித்துச் சென்றதாகக் கூறி, சேலத்தைச் சேர்ந்த நகை மதிப்பீட்டாளர் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கண்ணீர் மல்க புகார் மனு அளித்துள்ளார்.

நகைகளை மீட்க ரூ.10 லட்சத்துடன் சூளகிரி சென்றதாக புகார்

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் பிரபல வீ கோல்ட் நிறுவனத்தில் முகேஷ் என்பவர் தங்க நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் தொலைபேசி மூலம் முகேஷை தொடர்புகொண்டதாக கூறப்படுகிறது. தனது மனைவி சுஷ்மிதா பெயரில் சூளகிரியில் உள்ள முத்தூட் பைனான்ஸ் மற்றும் பஜாஜ் நிறுவனங்களில் தங்க நகைகள் அடகு வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நகைகளை மீட்டு விற்பனை செய்து, மீதமுள்ள பணத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறும் கேட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக அடகு ரசீதுகள் மற்றும் ஆதார் ஆவணங்களின் விவரங்களையும் முகேஷின் வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக குற்றச்சாட்டு

இதையடுத்து கடந்த மாதம் 11ஆம் தேதி முகேஷ் ரூ.10 லட்சம் பணத்துடன் சூளகிரிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அங்கு கோவிந்தராஜ், அவரது மனைவி சுஷ்மிதா, அவரது சகோதரர் சுஜிக்குமார் உள்ளிட்ட சிலர் இருந்ததாகவும், அவர்களிடம் முகேஷ் அறிமுகம் செய்து கொண்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் சூளகிரியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திற்குச் செல்ல முயன்றபோது, கோவிந்தராஜ் உள்ளிட்டவர்கள் திடீரென கத்தியை காட்டி மிரட்டியதாக முகேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், கொலை செய்து விடுவதாக மிரட்டி, தன்னிடம் இருந்த ரூ.10 லட்சம் பணத்தை பறித்துக் கொண்டு, காரில் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

காவல் நிலையத்தில் புகார்; நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு

இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த முகேஷ், சம்பவம் தொடர்பாக சூளகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் புகார் அளித்து பல நாட்கள் ஆகியும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், தங்களை காவல் துறையினர் அலைக்கழித்து வருவதாகவும் முகேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

இதையடுத்து தனது தந்தையுடன் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்த முகேஷ், சம்பவம் தொடர்பாக விரிவான புகார் மனுவை அளித்தார்.

“பணத்தை மீட்டுத் தர வேண்டும்” – நகை மதிப்பீட்டாளர்

இதுகுறித்து முகேஷ் கூறுகையில், அடகு வைத்திருந்த நகைகளை மீட்டுத் தருமாறு கோவிந்தராஜ் தொலைபேசி மூலம் கேட்டதன் அடிப்படையிலேயே ரூ.10 லட்சம் பணத்துடன் சூளகிரிக்கு சென்றதாக தெரிவித்தார்.

அப்போது அங்கிருந்த கோவிந்தராஜ், அவரது மனைவி சுஷ்மிதா உள்ளிட்டவர்கள் திடீரென கத்தியை காட்டி மிரட்டி, பணத்தை கொடுத்துவிட்டு ஓடிவிடுமாறு கூறியதாகவும், பின்னர் தன்னிடம் இருந்த ரூ.10 லட்சத்தை பறித்துக்கொண்டு காரில் தப்பிச் சென்றதாகவும் தெரிவித்தார்.

மேலும், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்யவில்லை என்றும், தன்னிடம் இருந்து பறித்துச் சென்ற ரூ.10 லட்சத்தை மீட்டுத் தருவதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply