வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள காவல்துறை தயார்! – டிஜிபி மகேஷ்குமார் அகர்வால்.
ஆவடி: வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளத் தமிழக காவல்துறையின் பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் இருப்பதாகத் தமிழக டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
ஆவடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாகத் தமிழக முதலமைச்சர் இரண்டு முறை முக்கிய ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும், காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்குக் காவல்துறையினர் தயாராக உள்ளதாகத் தெரிவித்தார். காவல்துறையில் பணியாற்றும் அனைத்து பிரிவினரும் மீட்புப் பணிகளில் ஈடுபடத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
காவலர் குடியிருப்பில் மழலையர் பள்ளி திறப்பு
இதனைத் தொடர்ந்து, ஆவடி காவல் ஆணையர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காவலர் குடியிருப்புப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மழலையர் பள்ளியை டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார்.
காவலர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மருத்துவ முகாம்
இதையடுத்து, காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான ‘காவல் குடும்பம்’ மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் மற்றும் அவரது மனைவி வனிதா அகர்வால் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
முகாமில் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ரத்தப் பரிசோதனை, ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை, ரத்த அழுத்தப் பரிசோதனை, கண் பரிசோதனை, இதயப் பரிசோதனை உள்ளிட்ட முழு உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
வடகிழக்குப் பருவமழையின்போது பொதுமக்களைப் பாதுகாக்கவும், அவசரகால மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் காவல்துறை தயாராக இருப்பதாக டிஜிபி தெரிவித்தார்.
தமிழக வெற்றிக்குரல்