ஆம்பூர் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி: முள்வேலியைப் பிடித்தபோது பரிதாபம்!
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நடராஜன், நேற்று மாலை கன்னடிகுப்பம் பகுதியில் உள்ள தனது உறவினரைப் பார்ப்பதற்காக வழக்கமாகச் செல்லும் விவசாய நிலத்தின் வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்து கொண்டிருந்தது.
முள்வேலியைப் பிடித்தபோது மின்சாரம் தாக்கியது
அப்போது தனியார் விவசாய நிலத்தில் இருந்த மின்கம்பத்தின் ஸ்டே கம்பியை நடராஜன் உரசியதாகக் கூறப்படுகிறது. இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து நிலைதடுமாறிக் கீழே விழுந்துள்ளார். பின்னர் அருகிலிருந்த முள்கம்பி வேலியைப் பிடித்தபோது, அந்த வேலியிலும் மின்சாரம் பாய்ந்திருந்ததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதற்கிடையே, நடராஜனைக் காணவில்லை என அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இன்று காலை விவசாய நிலத்தின் வழியாகச் சென்ற அப்பகுதி மக்கள், அவர் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக ஆம்பூர் கிராமிய காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விசாரணை
தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், மின்சார இணைப்பைத் துண்டித்து நடராஜனின் உடலை மீட்டனர். பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள ஆம்பூர் கிராமிய போலீசார், விவசாயி மின்சாரம் தாக்கி உயிரிழந்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக வெற்றிக்குரல்