100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்களுடன் ஆயுத பூஜை கொண்டாடிய தவெக!

திருவள்ளூர்: பூவிருந்தவல்லி ஒன்றியம், காட்டுப்பாக்கத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில், 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்களுடன் இணைந்து ஆயுத பூஜை விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பெண் தொழிலாளர்களுக்குப் புடவைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

ஆயுத பூஜையை முன்னிட்டு, காட்டுப்பாக்கம் தவெக பகுதி ஒருங்கிணைப்பாளர் செல்வம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழா, திருவள்ளூர் தெற்கு மாவட்டத் துணைச் செயலாளர் அறிவழகன் மற்றும் பூவிருந்தவல்லி ஒன்றியச் செயலாளர் ஜெகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

தொழிலாளர்களின் பணி உபகரணங்களுக்குச் சிறப்பு வழிபாடு

விழாவில், 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள் அன்றாடம் பயன்படுத்தும் மண்வெட்டி, கடப்பாரை, கத்தி, பாண்டு எனப்படும் இரும்புச் சட்டி உள்ளிட்ட பணி உபகரணங்களுக்குப் பொட்டிட்டு, மலர்தூவி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

உழைக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கும், அவர்களின் உழைப்பிற்கும் மதிப்பளிக்கும் வகையில் இந்த வழிபாடு நடைபெற்றது.

பெண் தொழிலாளர்களுக்குப் புடவைகள், இனிப்புகள் வழங்கல்

தொடர்ந்து, காட்டுப்பாக்கம் பகுதியில் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் களப்பணியாற்றும் பெண் தொழிலாளர்களுக்குப் புடவைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. அவர்களுக்கு ஆயுத பூஜை வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

தொழிலாளர்களின் உழைப்பைப் போற்றும் வகையில், அவர்களுடன் இணைந்து ஆயுத பூஜை கொண்டாடிய இந்த நிகழ்வு அப்பகுதியில் கவனம் பெற்றது.

Leave a Reply