வடசென்னையில் கனமழை வெளுத்து வாங்குகிறது! திருவொற்றியூர் பிரதான சாலையில் முழங்கால் அளவு மழைநீர் தேக்கம் – பொதுமக்கள் கடும் அவதி!
சென்னை: வடசென்னையின் திருவொற்றியூர் பகுதியில் பெய்து வரும் கனமழையால் பிரதான சாலையில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பேருந்துப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
திருவொற்றியூர் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. குறிப்பாக, திருவொற்றியூர் பிரதான சாலையில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வழியாகச் சென்ற இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் சில பழுதாகி நடுவழியில் நின்றதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
கைக்குழந்தையுடன் தவித்த பெண்!
சாலையில் தேங்கிய மழைநீரில் கைக்குழந்தையுடன் சென்ற பெண் ஒருவர், மழையில் நனைந்தபடி கடும் சிரமத்திற்கு உள்ளானார். மழைநீரில் வாகனங்களை இயக்க முடியாமல் திணறிய வாகன ஓட்டிகள், தங்களது வாகனங்களைத் தள்ளிச் செல்லும் நிலை ஏற்பட்டது.
பேருந்துகள் நிற்காததால் பயணிகள் அவதி!
திருவொற்றியூர் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்தும், சில மாநகரப் பேருந்துகள் நிற்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது. மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் பேருந்துகள் நிற்காததால், குழந்தைகளுடன் வந்த பயணிகள் உள்ளிட்ட பொதுமக்கள் முழங்கால் அளவு மழைநீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால் அலுவலகங்களுக்குச் செல்வோர், வேலைக்குச் செல்வோர் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே வந்தவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
அரசு மகப்பேறு மருத்துவமனை நுழைவாயிலிலும் மழைநீர் தேக்கம்!
திருவொற்றியூர் அரசு மகப்பேறு மருத்துவமனையின் நுழைவாயில் முன்பும் மழைநீர் தேங்கியதால், மருத்துவமனைக்கு வந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வந்தவர்கள் தேங்கிய தண்ணீரைக் கடந்து செல்ல சிரமப்பட்டனர்.
கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் பழுதாகி நின்றதால் வாகன ஓட்டிகள் மேலும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
திருவொற்றியூர் பகுதியில் மழைநீரை அகற்றவும், போக்குவரத்தைச் சீரமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கனமழையால் வடசென்னையின் முக்கியப் பகுதிகளில் ஒன்றான திருவொற்றியூரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக்குரல்