ஆம்பூரில் 17 சென்ட் நிலம் போலி பத்திரப்பதிவு செய்து மோசடி? தொழிலதிபர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு!

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பள்ளிதெரு பகுதியில் 17 சென்ட் நிலத்தை போலியாகப் பத்திரப்பதிவு செய்து நில மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், தொழிலதிபர், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 6 பேர் மீது உமராபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணன், தம்பி இணைந்து வாங்கிய 17 சென்ட் நிலம்

வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த வேணுகோபால் நாயுடு, ராமசாமி நாயுடு ஆகியோர் அண்ணன், தம்பிகள். இவர்கள் ஆம்பூர் அடுத்த பள்ளிதெரு பகுதியில் உள்ளாடைகள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 2001-ஆம் ஆண்டு தங்களது நிறுவனத்திற்கு அருகில் 17 சென்ட் நிலத்தை இருவரும் இணைந்து வாங்கியுள்ளனர். இதற்கிடையே, ராமசாமி நாயுடு சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார்.

போலி பத்திரப்பதிவு செய்ததாகப் புகார்

ராமசாமி நாயுடு உயிரிழந்ததைத் தொடர்ந்து, இருவரும் இணைந்து வாங்கிய நிலத்தை வேணுகோபால் நாயுடு தனது பெயருக்கு போலியாகப் பத்திரப்பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், கடந்த 2021-ஆம் ஆண்டு அந்த நிலத்தை தனது மருமகள் நந்திதா பெயருக்கு மாற்றிப் பத்திரப்பதிவு செய்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, ராமசாமி நாயுடுவின் மகள் பூர்ணிமா, தனது தந்தைக்குச் சொந்தமான நிலத்தைத் தங்களது குடும்பத்தினருக்குத் தெரியாமல் போலிப் பத்திரப்பதிவு செய்து மாற்றியுள்ளதாகச் சென்னை குற்றப்பிரிவு காவல்துறையிடம் ஆன்லைன் வாயிலாகப் புகார் அளித்துள்ளார்.

அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு

பூர்ணிமா அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, சென்னை குற்றப்பிரிவு காவல்துறையினரின் உத்தரவின்பேரில் உமராபாத் காவல்துறையினர் இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் தொழிலதிபர் வேணுகோபால் நாயுடு, அவரது மருமகள் நந்திதா, அப்போது ஆம்பூர் மண்டல துணை வட்டாட்சியராகப் பணியாற்றியவரும் தற்போது வட்டாட்சியராகப் பணியாற்றி வருபவருமான பாரதி, கைலாசகிரி கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார், அப்போதைய சார் பதிவாளர் ரமணன் மற்றும் பத்திர எழுத்தாளர் நந்தகுமார் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவல்துறையினர் தீவிர விசாரணை

17 சென்ட் நிலம் தொடர்பாகப் போலிப் பத்திரப்பதிவு செய்து நில மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில், தொழிலதிபர் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், உமராபாத் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆம்பூர் பகுதியில் நிலப் பத்திரப்பதிவு தொடர்பாக எழுந்துள்ள இந்தப் புகார் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கின் விசாரணை முடிவில் கூடுதல் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply