முதலமைச்சர் கோப்பை குத்துச்சண்டைப் போட்டியில் தங்கம் வென்ற ஆவடி மாணவி! ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு.
ஆவடி: கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் குத்துச்சண்டைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற ஆவடியைச் சேர்ந்த 8-ஆம் வகுப்பு மாணவி பூசிக்கா சாய்க்கு, சொந்த ஊர் திரும்பியபோது ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்ற மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைப் போட்டிகளில், ஆவடி பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்றனர். இதில் பூசிக்கா சாய் குத்துச்சண்டைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். மேலும், கராத்தே உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
ஆவடி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு
போட்டிகளில் பதக்கங்களை வென்று சொந்த ஊர் திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு திருவள்ளூர் மாவட்டம், ஆவடி ரயில் நிலையத்தில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மாணவர்களுக்கு மாலைகள் அணிவித்தும், கிரீடம் சூட்டியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
முதலமைச்சருக்கு மாணவி நன்றி
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாணவி பூசிக்கா சாய், முதலமைச்சர் கோப்பைப் போட்டியில் குத்துச்சண்டை விளையாட்டும் இடம்பெற்றதற்காகத் தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும், அடுத்ததாக ஒடிசாவில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளதாகவும் கூறினார். கோவையில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைப் போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதற்காகத் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்தார்.
மாநில அளவிலான போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்குக் கிடைத்த இந்த வரவேற்பு, ஆவடி பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக்குரல்