மயிலம் மலைக்கோவிலில் ஆவணி மாத கிருத்திகை விழா கோலாகலம்! தங்கக் கவசத்தில் அருள்பாலித்த சுப்பிரமணிய சுவாமி – “அரோகரா” முழக்கத்துடன் மலையை வலம் வந்த பக்தர்கள்
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த மயிலம் மலைமேல் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், ஆவணி மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் வெகு விமரிசையாக நடைபெற்றன.
இதையொட்டி இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகப் பொடி, பஞ்சாமிர்தம், பால், சந்தனம், தேன், திருநீறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதேபோல் உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கும் மஞ்சள், பால், தேன், பழங்கள், சந்தனம், விபூதி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
தங்கக் கவசத்தில் அருள்பாலித்த முருகப்பெருமான்
சிறப்பு அபிஷேகங்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு, சேவல் கொடி மற்றும் வேல் ஏந்திய திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
உற்சவர் வள்ளி, தெய்வானையுடன் மலர்களால் அழகுற அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
“அரோகரா” முழக்கத்துடன் மலை வலம்
ஆவணி கிருத்திகை விழாவின் முக்கிய நிகழ்வாக இரவு நேரத்தில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி மலை வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, “அரோகரா… அரோகரா… முருகா… முருகா…” என பக்தி முழக்கங்களை எழுப்பியபடி உற்சவருடன் மலையை வலம் வந்தனர்.
மயிலம் மலைக்கோவிலில் நடைபெற்ற ஆவணி மாத கிருத்திகை சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்களின் வருகையால் கோவில் வளாகம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது.
தமிழக வெற்றிக்குரல்