வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!

சென்னை: வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளத் தமிழக அரசு மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் இன்று (அக். 22) சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்குச் சென்ற முதலமைச்சர், இந்திய வானிலை ஆய்வு மையம் வழங்கியுள்ள தற்போதைய வானிலை நிலவரம், எல் நினோ தொடர்பான முன்னறிவிப்புகள் மற்றும் பருவமழையை எதிர்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள தயார்நிலை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மழை எச்சரிக்கை மாவட்டங்களின் நிலவரம் ஆய்வு

ஒருங்கிணைந்த பல்வகைப் பேரிடர் கண்காணிப்பு கட்டமைப்பு மூலம் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களின் தற்போதைய நிலவரம், மழைப்பொழிவு மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உள்ளிட்ட விவரங்களை முதலமைச்சர் பார்வையிட்டார்.

இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள கன்னியாகுமரி, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களின் நிலவரம் குறித்தும் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

நீர்நிலைகளைக் கண்காணிக்க உத்தரவு

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம், நீர் சேமிப்பு நிலை, ஆறுகள் மற்றும் குளங்களின் நிலை ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணித்து, நிலைமைக்கு ஏற்ப தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சர் அறிவுறுத்தினார். காவிரி உள்ளிட்ட நீர்நிலைகளையும், வேளாண்மைக்குத் தேவையான நீர் ஆதாரங்களையும் கண்காணித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்குத் தேவையான உதவிகள், மருத்துவ வசதிகள் மற்றும் நிவாரணப் பணிகள் தடையின்றி நடைபெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்

மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மற்றும் மழை, வெள்ளம் தொடர்பான தகவல்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்களுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுவதாக முதலமைச்சரிடம் விளக்கப்பட்டது.

பருவமழைக் காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுக்க அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தலைமைச் செயலாளர் என். முருகானந்தம், வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் கே.பி. சந்திர மோகன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைச் செயலாளர் அ. சிவகுமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Leave a Reply