தலைமைச் செயலகத்தில் விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை! விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து விரிவான கலந்தாய்வு!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு விவசாயச் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுடனான குறைதீர்ப்பு மற்றும் கலந்தாய்வுக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. என். ஆனந்த் (புஸ்ஸி ஆனந்த்) பங்கேற்றார்.

இக்கூட்டத்தில், விவசாயிகள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள், விவசாயச் சங்கங்களின் கோரிக்கைகள் மற்றும் வேளாண்மை சார்ந்த முக்கியப் பிரச்சினைகள் குறித்து பிரதிநிதிகளுடன் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. விவசாயிகளின் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்த அமைச்சர்கள், அவற்றை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தனர்.

இந்தக் கூட்டத்தில், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு. கே.ஏ. செங்கோட்டையன், போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு. ஏ. விஜய் தமிழன் பார்த்திபன், கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் திரு. எம். விஜய் பாலாஜி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. ஜா. முகமது பர்வேஸ், கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு. வி. காந்திராஜ், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு. ஆர். வினோத், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சி. ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. க. மாரிமுத்து, டாக்டர் எம். சுதாகர், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பல்வேறு விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

Leave a Reply