மக்களுக்கு இடையூறு இல்லாமல் முதலமைச்சர் கான்வாய் பயணம்! பொதுமக்களிடம் வரவேற்பு என ஜே.சி.டி. பிரபாகரன் பேச்சு.

சென்னை: “நமக்காக வீட்டில் ஒருவர் காத்திருப்பார்கள் என்பதை உணர்ந்து, அனைவரும் சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும்” எனத் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் முதலமைச்சரின் வாகன அணிவகுப்பு செல்வது பொதுமக்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உலக விபத்துக் காய தினத்தை முன்னிட்டு, சென்னை ராமாபுரத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில், முதலுதவி மற்றும் அதனைத் தொடர்ந்து வழங்கப்படும் சிறப்பு பல்வகைக் காய சிகிச்சையின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் பிரித்வி மோகன்தாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அறுவை சிகிச்சை மருத்துவர்கள், பல்வேறு துறை நிபுணர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரன், விபத்துகளில் சிக்கி சிகிச்சை பெற்று மீண்டவர்களைக் கவுரவித்தார்.

உயிரைப் பாதுகாக்க சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும்!

நிகழ்ச்சியில் பேசிய ஜே.சி.டி. பிரபாகரன், புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு மருத்துவத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு, மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். பல்வேறு துறைகளில் நிலுவையில் இருந்த கோப்புகள் மீண்டும் எடுத்துப் பரிசீலிக்கப்படுவதாகவும், ஆட்சி வெளிப்படையாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து, மனித உயிரின் மதிப்பை அனைவரும் உணர வேண்டும் என வலியுறுத்திய அவர், வாகன ஓட்டிகள் சாலை விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும், இருசக்கர வாகனங்களில் செல்லும்போது தலைக்கவசமும், கார்களில் பயணிக்கும்போது இருக்கைப் பட்டையும் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

“நமக்காக வீட்டில் ஒருவர் காத்திருப்பார்கள் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். சாலை விதிகளைப் பின்பற்றுவது நமது உயிரைப் பாதுகாப்பதுடன், நம்மை நம்பிக் காத்திருக்கும் குடும்பத்தினரின் வாழ்க்கையையும் பாதுகாக்கும்” என அவர் வலியுறுத்தினார்.

முதலமைச்சரின் வாகன அணிவகுப்புக்கு வரவேற்பு

முதலமைச்சரின் வாகன அணிவகுப்பு செல்லும்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் குறித்துப் பேசிய ஜே.சி.டி. பிரபாகரன், சாலையில் வழக்கம்போல வாகனப் போக்குவரத்து நடைபெறும் நிலையில், ஒரு வழித்தடத்தில் மட்டும் முதலமைச்சரின் வாகனம் செல்வதாகக் குறிப்பிட்டார்.

இவ்வாறு பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாமல் முதலமைச்சர் பயணம் செய்வது மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்த அவர், “இதுபோன்ற நடைமுறையைச் செயல்படுத்த இத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளன” என்றும் கூறினார்.

மியாட் மருத்துவமனையில் 6,000 விபத்து சிகிச்சைகள்

நிகழ்ச்சியில் பேசிய மருத்துவக் குழுவினர், மியாட் மருத்துவமனையில் இதுவரை சுமார் 6,000 விபத்து சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். பெரும்பாலான விபத்துகளில் இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் பாதிக்கப்படுவதாகவும், அவர்களுக்கு தலை மற்றும் முதுகுத்தண்டுப் பகுதியில் கடுமையான காயங்கள் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டனர்.

விபத்து ஏற்பட்டவுடன் உரிய முதலுதவி அளிப்பதும், தாமதமின்றி சிறப்பு மருத்துவச் சிகிச்சை வழங்குவதும் உயிரைக் காப்பாற்றுவதில் முக்கியப் பங்கு வகிப்பதாக மருத்துவர்கள் வலியுறுத்தினர்.

சாலைப் பாதுகாப்பு, விபத்துகளைத் தடுப்பது மற்றும் விபத்தில் சிக்கியவர்களுக்கு உடனடி மருத்துவ உதவி கிடைப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

Leave a Reply