திண்டுக்கல் அருகே மின்சாரம் தாக்கி 2 பசுமாடுகள் பலி! மின்வாரியம் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு!
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே பாலகிருஷ்ணாபுரம், கணபதி நகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பியிலிருந்து மின்சாரம் தாக்கி இரண்டு பசுமாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணபதி நகர் பகுதியில் உள்ள ஓடையில் தண்ணீர் குடிப்பதற்காக இரண்டு பசுமாடுகள் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, அப்பகுதியில் அறுந்து விழுந்து கிடந்த மின்கம்பி மூலம் மின்சாரம் தாக்கியதில் இரண்டு மாடுகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.
இதற்கிடையே, மின்கம்பி அறுந்து விழுந்தது குறித்து மின்வாரியத்திற்குத் தகவல் தெரிவித்தும், ஊழியர்கள் உரிய நேரத்தில் வந்து நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதன் காரணமாகவே இந்தச் சம்பவம் ஏற்பட்டதாகவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
எனவே, அறுந்து விழுந்த மின்கம்பிகள் தொடர்பான புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நிகழாமல் தடுக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக வெற்றிக்குரல்