செம்பட்டி அருகே சமூக வலைதளத்தில் அரிவாள், துப்பாக்கியுடன் புகைப்படம் பதிவு செய்து அச்சுறுத்தல்: இளைஞர் கைது!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே சமூக வலைதளத்தில் அரிவாள், துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இருப்பது போன்ற புகைப்படங்களைப் பதிவிட்டு பொதுமக்களை அச்சுறுத்தியதாக இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
செம்பட்டி அருகே சீவல்சரகு பகுதியைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியான பாண்டியன் என்ற அலெக்ஸ் பாண்டியன் (23) என்பவரின் பெயரில் போலியாக சமூக வலைதளக் கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது. அந்தக் கணக்கில் அவரது புகைப்படத்துடன் அரிவாள் மற்றும் துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் பதிவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
போலீசார் விசாரணை: இளைஞர் கைது
இதுகுறித்து செம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் ஆறுமுகநயினார், உதவி ஆய்வாளர் ஷேக் அப்துல்லா மற்றும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக வாடிப்பட்டி அருகே பொம்மன்பட்டியைச் சேர்ந்த மருதுபாண்டியின் மகன் ஸ்ரீரில்குமார் (20) என்பவரைப் போலீசார் கைது செய்தனர்.
மேலும், அவரிடமிருந்து பட்டாக்கத்தி ஒன்றையும் பறிமுதல் செய்த போலீசார், இந்தச் சம்பவம் தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக வெற்றிக்குரல்