கொடைக்கானல் தனியார் தங்கும் விடுதியில் போதைப்பொருட்கள் பறிமுதல்! இருவர் கைது.
திண்டுக்கல் – கொடைக்கானல்:
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைப் பகுதியான பூண்டி ஊராட்சி நாட்டாம்பட்டியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் காவல்துறையினர் நடத்திய சோதனையில், போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக இருவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
எம்.டி.எம்.ஏ., எல்.எஸ்.டி., கஞ்சா பறிமுதல்!
கடந்த 19.10.2026 அன்று நடைபெற்ற சோதனையில், 0.08 கிராம் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள், 8 எல்.எஸ்.டி. முத்திரைகள் மற்றும் 30 கிராம் கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவர் கைது!
இந்தச் சம்பவம் தொடர்பாக, தனியார் தங்கும் விடுதியில் பணிபுரிந்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த விஷ்ணு பிரசாத் (22) மற்றும் சுற்றுலாப் பயணி டேனியல் (22) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களை நீதிமன்றக் காவலுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழு தனியார் விடுதிகளுக்கு ஏற்கெனவே சீல்!
கொடைக்கானலில் போதைப்பொருட்களைப் பதுக்கி வைத்தல் மற்றும் விற்பனை செய்தல் தொடர்பாக இதுவரை ஏழு தனியார் தங்கும் விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை!
போதைப்பொருட்களைப் பயன்படுத்துதல், பதுக்கி வைத்தல் மற்றும் விற்பனை செய்தல் உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.
கொடைக்கானலில் போதைப்பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக வெற்றிக்குரல்