அகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு: தலைவராக உமா பச்சையப்பன் தேர்வு!
அகரம், அக்டோபர் 24:
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு (SMC – School Management Committee) மறுகட்டமைப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், புதிய பள்ளி மேலாண்மைக் குழு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், குழுவின் தலைவராக திருமதி உமா பச்சையப்பனும், துணைத் தலைவராக கவிதா அருளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பள்ளியின் வளர்ச்சியை மேம்படுத்துதல், மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துதல், அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் பள்ளியின் செயல்பாடுகளில் பெற்றோர்கள், பொதுமக்களின் பங்களிப்பை அதிகரித்தல் உள்ளிட்ட முக்கிய நோக்கங்களுடன் இக்கூட்டம் நடைபெற்றது.
மேலும், பள்ளியின் முன்னேற்றத்திற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்தும், மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் பெற்றோர்கள் மற்றும் சமூகத்தினரின் பங்களிப்பை அதிகரிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு, பள்ளியின் வளர்ச்சிக்கும் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும் தங்களது ஒத்துழைப்பை வழங்கினர்.
தமிழக வெற்றிக்குரல்