ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை! ரூ.20 ஆயிரம் பறிமுதல்.
பொறியாளர் பிரிவில் திடீர் ஆய்வு – மாநகராட்சி ஒப்பந்ததாரரிடம் விசாரணை
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை லஞ்ச ஒழிப்புப் போலீசார் நடத்திய திடீர் சோதனையில், கணக்கில் வராததாகக் கூறப்படும் ரூ.20 ஆயிரம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்புத் துறை காவல் ஆய்வாளர் ரவி தலைமையில் ஆறு பேர் கொண்ட குழுவினர், மாலை 3 மணியளவில் ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தின் பொறியாளர் பிரிவில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின்போது, அலுவலகக் கதவுகள் மூடப்பட்டு, அங்கிருந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது, பொறியாளர் பிரிவு அறையில் இருந்த மாநகராட்சி ஒப்பந்ததாரர் ராஜ்குமார் என்பவரிடமிருந்து ரூ.20 ஆயிரம் ரொக்கப் பணத்தைப் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அந்தப் பணம் தொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்தச் சோதனை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் பின்னணி மற்றும் அது தொடர்பான விவரங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழக வெற்றிக்குரல்