மழைநீர் கால்வாயில் கழிவுநீர்! ஆவடி பிரியாணி உணவகத்திற்கு ரூ.5,000 அபராதம்!
ஆவடி: சென்னை புறநகர் பகுதியான ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட புதிய ராணுவச் சாலையில், மழைநீர் கால்வாயில் கழிவுநீர் மற்றும் உணவுக் கழிவுகளைக் கொட்டியதாகக் கூறப்படும் தனியார் பிரியாணி உணவகத்திற்கு மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் ரூ.5,000 அபராதம் விதித்தனர்.
சாலையில் ஆறாக ஓடிய கழிவுநீர்
புதிய ராணுவச் சாலையில் இயங்கி வரும் எஸ்.எஸ். பக்கெட் பிரியாணி உணவகத்தில் முறையான கழிவுநீர் சேகரிப்புத் தொட்டி இல்லாமல் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பல மாதங்களாக உணவகத்தின் கழிவுநீர் மற்றும் விற்பனை முடிந்த பிறகு மீதமாகும் உணவுப் பொருட்கள் அருகிலுள்ள மழைநீர் கால்வாயில் கொட்டப்பட்டு வந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகினர்.
மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
இதுகுறித்து தகவல் அறிந்த ஆவடி மாநகராட்சி சுகாதார நல அலுவலர் மொய்தீன் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, எஸ்.எஸ். பக்கெட் பிரியாணி உணவகத்திற்கு ரூ.5,000 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.
மேலும், மழைநீர் கால்வாயில் இனிமேல் கழிவுநீரையோ உணவுக் கழிவுகளையோ கொட்டக்கூடாது என உணவக நிர்வாகத்தினருக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதேபோன்ற தவறு மீண்டும் நடைபெற்றால், அரசு விதிகளின்படி உணவகத்திற்கு சீல் வைக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
தமிழக வெற்றிக்குரல்