குடிமைப் பணித் தேர்வு 2027: தமிழகத்தில் 525 பேருக்கு இலவசப் பயிற்சி!

முதல்நிலைத் தேர்வுக்கான பயிற்சி தொடக்கம் – சென்னை, மதுரை, கோவையில் பயிற்சி மையங்கள்

சென்னை – அக்டோபர் 29: 2027-ஆம் ஆண்டுக்கான ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) குடிமைப் பணிகள் முதல்நிலைத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தமிழ்நாடு அரசின் சார்பில் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில், மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் த. பரத்குமார் பங்கேற்று, பயிற்சிக்கு அனுமதிக்கப்பட்டுள்ள தேர்வர்களுடன் கலந்துரையாடினார்.

தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், குடிமைப் பணித் தேர்வில் தமிழக மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று, இந்திய அளவில் உயர்ந்த நிர்வாகப் பொறுப்புகளை வகிக்க வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பயிற்சி மையத்தில் பயின்று முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பயிற்சி மையத்தின் செயல்பாடுகள் தேர்வர்களுக்குப் பயனுள்ளதாக அமையும் வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார்.

மேலும், சென்னை சைதாப்பேட்டையில் கட்டப்பட்டு வரும் பயிற்சி மையத்தில் எதிர்காலத்தில் அதிக எண்ணிக்கையிலான தேர்வர்கள் சேர்க்கப்படுவார்கள் என்றும், பயிற்சி மையத்திற்குத் தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

சென்னை, மதுரை, கோவையில் 525 பேருக்குப் பயிற்சி

தமிழக அரசின் செய்திக்குறிப்பின்படி, மொத்தம் 525 தேர்வர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. சென்னையில் 225 பேருக்கு முழுநேரப் பயிற்சியும், 100 பேருக்குப் பகுதிநேரப் பயிற்சியும் வழங்கப்படும். மதுரை மற்றும் கோவை நகரங்களில் தலா 100 பேருக்கு முழுநேரப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதன் மூலம் குடிமைப் பணித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு முறையான பயிற்சி, வழிகாட்டுதல் மற்றும் தேர்வுக்கான தயாரிப்பு வாய்ப்புகள் கிடைக்க உள்ளன.

இந்நிகழ்ச்சியில் மனிதவள மேலாண்மைத்துறையின் அரசு முதன்மைச் செயலாளரும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் இயக்குநருமான சி. சமயமூர்த்தி, கூடுதல் இயக்குநர் ராகவேந்திரன், பயிற்சி மைய முதல்வர் முனைவர் தே. சங்கர சரவணன், பயிற்சி மைய நிர்வாக அலுவலரும் மாவட்ட வருவாய் அலுவலருமான பி.எஸ். விஜயலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

குடிமைப் பணித் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில், பயிற்சி மையத்தின் வசதிகளையும் பயிற்சி வாய்ப்புகளையும் மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply