மேலூர் தொகுதியில் ரூ.1.10 கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்கள் திறப்பு! அமைச்சர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்!

மேலூர், அக். 29: மதுரை மாவட்டம், மேலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட அரசு கட்டிடங்களை உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் திறந்து வைத்தார்.

சுகாதார நிலையம், ஊராட்சி அலுவலகம் திறப்பு

வஞ்சிநகரம் ஊராட்சிக்கு உட்பட்ட நெல்லுகுண்டுபட்டியில் துணை சுகாதார நிலையக் கட்டிடமும், நாவினிப்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்றக் கட்டிடமும் திறந்து வைக்கப்பட்டன. மேலும், கோட்டநத்தம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட முருகன்பட்டியில் கூடுதல் வகுப்பறைகளுடன் கூடிய பள்ளிக் கட்டிடமும், அம்பலகாரன்பட்டி மற்றும் திருவாதவூர் பகுதிகளில் பொது சேவை மற்றும் மின்னணு சேவை மையக் கட்டிடங்களும் திறக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் விஸ்வநாதன் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி புதிய கட்டிடங்களைப் பயன்பாட்டுக்குத் தொடங்கி வைத்தார்.

நெல்லுகுண்டுபட்டி துணை சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள்

நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில், மேலூர் சட்டமன்றத் தொகுதியில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் நிலுவையில் இருந்த அரசு கட்டிடங்கள் தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

நெல்லுகுண்டுபட்டியில் அமைக்கப்பட்டுள்ள துணை சுகாதார நிலையத்தில் குடிநீர், மருத்துவப் பயன்பாட்டிற்கான தண்ணீர் மற்றும் தடையற்ற மின்சார வசதிகள் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

மேலும், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு காலை 8 மணி மற்றும் மாலை 5 மணிக்கு பேருந்து வசதி ஏற்படுத்தித் தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சி

இந்த நிகழ்ச்சிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமை தாங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குநர் சதீஷ் பாபு, மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் விசாலாட்சி, மேலூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, மாவட்ட சுகாதார அலுவலர் பொற்செல்வன், மேலூர் வட்டாட்சியர் வசந்த் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

மேலும், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் நூர்முகமது, முன்னாள் மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் திலகராஜ், நல்லமணி, மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பிரதாப், மாவட்ட துணைச் செயலாளர் சிவலிங்கம் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

த.வெ.க. மாவட்டச் செயலாளர் விஷால் கிருஷ்ணா, மேலூர் நகரச் செயலாளர் பிரசாத், மாவட்ட துணைச் செயலாளர் தினகரன், ஒன்றியச் செயலாளர்கள் மனோஜ்குமார், எம். குமார், மதன்குமார், புகழேந்தி, மாவட்டப் பொருளாளர் மணிமாறன் உள்ளிட்ட நிர்வாகிகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் அம்பேத்கர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Leave a Reply