திருவேற்காட்டில் தவெக கொடியேற்று விழா! 501 பேருக்கு அன்னதானம்; தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்!

திருவேற்காடு: திருவள்ளூர் மத்திய மாவட்டம், ஆவடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவேற்காடு நகராட்சி 12-வது வார்டில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆவடி எம்.எல்.ஏ.வுக்கு உற்சாக வரவேற்பு

நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்த ஆவடி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஆர். ரமேஷ்குமாருக்கு, அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் மகளிர் அணியினர் மலர் தூவியும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து, டாக்டர் ஆர். ரமேஷ்குமார் தலைமையில், மேற்கு பகுதிச் செயலாளர் என். சரவணன் முன்னிலையில் அலங்கரிக்கப்பட்ட புதிய பெயர்ப் பலகை திறந்து வைக்கப்பட்டது. பின்னர், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை டாக்டர் ஆர். ரமேஷ்குமார் ஏற்றி வைத்தார்.

தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

விழாவின் ஒரு பகுதியாக, அப்பகுதியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், 501 பேருக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply