காரிமங்கலம் பகுதியில் தொடர்ச்சியாக ஆடுகளைத் திருடி விற்பனை செய்து வந்த திருடன் கைது 4 ஆடுகள் பறிமுதல்
ரூ.40 ஆயிரம் மதிப்பிலான 4 ஆடுகள் மீட்பு – பல்வேறு இடங்களில் ஆடு, மாடுகளைத் திருடியதாக விசாரணையில் தகவல்
தருமபுரி – அக்டோபர் 31: தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களில் வளர்க்கப்படும் ஆடுகள் தொடர்ந்து திருடப்பட்டு வந்ததாகப் புகார்கள் எழுந்தன. இந்நிலையில், காளப்பனஹள்ளி கிராமத்தில் நான்கு ஆடுகளைத் திருடியதாகக் கூறப்படும் நபரை போலீசார் கைது செய்து, ரூ.40 ஆயிரம் மதிப்பிலான ஆடுகளை மீட்டுள்ளனர்.
தருமபுரி டவுன் குமாரசாமிபேட்டையைச் சேர்ந்த விவசாயி கணேஷ்பிரபு (46), காரிமங்கலம் அருகே உள்ள காளப்பனஹள்ளி கிராமத்தில் இரண்டரை ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். அத்துடன் ஆடு, மாடுகளையும் வளர்த்து வருகிறார். இவர் தினமும் காலை விவசாய நிலத்திற்குச் சென்று பணிகளை மேற்கொண்டு, மாலையில் தருமபுரியில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்புவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஆடு, மாடுகளைத் தனது நிலத்தில் உள்ள கொட்டகையில் கட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். மறுநாள் காலை விவசாய நிலத்திற்குச் சென்று பார்த்தபோது, கொட்டகையில் கட்டப்பட்டிருந்த நான்கு ஆடுகள் காணாமல் போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கணேஷ்பிரபு, காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது மொரப்பூர் சாலையில் சந்தேகத்திற்கிடமாகச் சென்ற நபரைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், காரிமங்கலம் அருகே காளப்பனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த அருண் (39) என்பவர் நான்கு ஆடுகளையும் திருடியது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும், அருண் பல்வேறு இடங்களில் ஆடு, மாடுகளைத் திருடிய சம்பவங்களிலும் தொடர்புடையவர் என்பது விசாரணையில் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரிடமிருந்து ரூ.40 ஆயிரம் மதிப்பிலான நான்கு ஆடுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து அருணைக் கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைத்தனர். காரிமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து ஆடுகள் திருடப்பட்டு வந்த நிலையில், இந்த கைது நடவடிக்கை அப்பகுதி விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
தமிழக வெற்றிக்குரல்