தீபாவளி இனிப்பு, காரம் தயாரிப்பில் உணவுப் பாதுகாப்பு விதிகள்! தர்மபுரியில் 50-க்கும் மேற்பட்ட வணிகர்களுக்கு விழிப்புணர்வுக் கூட்டம்!
தர்மபுரி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்பாளர்கள், பேக்கரி உரிமையாளர்கள், விநியோகிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பண்டிகைக் காலத்தில் தற்காலிகமாக இனிப்பு, காரம் தயாரித்து விற்பனை செய்வோருக்கான உணவுப் பாதுகாப்பு விழிப்புணர்வுக் கூட்டம் தர்மபுரியில் நடைபெற்றது.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சரவணன், ஐ.ஏ.எஸ்., அவர்களின் ஆலோசனையின்படி, மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் தர்மபுரி நேதாஜி பைபாஸ் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் இக்கூட்டம் நடைபெற்றது.
அதிகாரிகள் முன்னிலையில் விழிப்புணர்வுக் கூட்டம்
தர்மபுரி நகராட்சி மற்றும் பென்னாகரம் ஒன்றிய உணவுப் பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் வரவேற்றார். தர்மபுரி ஹோட்டல் மற்றும் பேக்கரி சங்கச் செயலாளர் வேணுகோபால், பொருளாளர் பொன்னி ராஜா, பாப்பாரப்பட்டி ரங்கவிலாஸ் விஜய் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார் தலைமையில், உணவுப் பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் வணிகர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.
உணவுப் பாதுகாப்பு உரிமம் பெறுவது கட்டாயம்
கூட்டத்தில் தலைமை உரையாற்றிய மாவட்ட நியமன அலுவலர் கைலாஷ்குமார், உணவுப் பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் இன்றி உணவுப் பொருட்கள், தீபாவளி இனிப்பு மற்றும் கார வகைகளைத் தயாரிப்பது, விநியோகிப்பது, விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் எனத் தெரிவித்தார்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவு வணிகர்கள், பேக்கரிகள், தயாரிப்பாளர்கள், விநியோகிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உரிய உணவுப் பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழைப் பெற்று வணிகம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். தனியார் மண்டபங்களை வாடகைக்கு எடுத்து பண்டிகைக் காலத்தில் தற்காலிகமாக இனிப்பு, காரம் தயாரித்து விற்பனை செய்வோரும் உணவுப் பாதுகாப்புத் துறையின் அனுமதி பெற்று உரிய சான்றிதழுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
தயாரிப்பிடங்களில் சுகாதாரம் அவசியம்
இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்பில் ஈடுபடும் பணியாளர்கள் தனிநபர் சுகாதாரத்தையும், தயாரிப்பிடத்தின் சுற்றுப்புறத் தூய்மையையும் கட்டாயம் பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. தயாரிப்பு மற்றும் இருப்பு வைக்கும் இடங்களில் பூச்சிகள் அண்டாமல் கண்காணிக்க வேண்டும் என்றும், தரமான சமையல் எண்ணெய் மற்றும் மூலப்பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், காலாவதி தேதி முடிவடையாத பொருட்களைப் பயன்படுத்துவதுடன், உணவுத் தயாரிப்புக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீரையே பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தரமற்ற மூலப்பொருட்களைப் பயன்படுத்துவது, அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக செயற்கை நிறமூட்டிகளைச் சேர்ப்பது, ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் மீண்டும் உபயோகிப்பது, தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களைப் பயன்படுத்துவது போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டது. அச்சிடப்பட்ட பழைய செய்தித்தாள்களில் உணவுப் பொருட்களைக் காட்சிப்படுத்துவது, பொட்டலமிடுவது மற்றும் விநியோகிப்பதும் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.
பயன்படுத்திய சமையல் எண்ணெயைச் சேகரிக்கும் RUCO திட்டம்
சமையல் எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்திய கைலாஷ்குமார், பயன்படுத்திய எண்ணெயை உணவுப் பாதுகாப்புத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட RUCO திட்டத்தின் கீழ் செயல்படும் முகவர்களிடம் ஒப்படைக்கலாம் எனத் தெரிவித்தார்.
மீதமாகும் பயன்படுத்திய சமையல் எண்ணெயை அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடம் வழங்கி உரிய தொகையைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும், தர்மபுரி மாவட்டத்தில் பயன்படுத்திய சமையல் எண்ணெயைச் சேகரிக்கும் நான்கு அங்கீகரிக்கப்பட்ட முகவர்களின் தொடர்பு எண்களையும் தெரிவித்தார்.
உணவுப் பொட்டலங்களில் இடம்பெற வேண்டிய விவரங்கள்
உணவுப் பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் பேசுகையில், ஒவ்வொரு உணவு வணிக நிறுவனத்திலும் முறையான பயிற்சி பெற்ற மேற்பார்வையாளர் ஒருவர் கட்டாயம் இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்களில் பொருளின் பெயர், தயாரிப்பாளரின் முகவரி, தயாரிப்பு தேதி, காலாவதி அல்லது பயன்படுத்துவதற்கான இறுதித் தேதி, எடை அல்லது எண்ணிக்கை, சேர்மானங்கள், ஒவ்வாமை தொடர்பான எச்சரிக்கை, உணவுப் பாதுகாப்பு உரிம எண் மற்றும் நுகர்வோர் தொடர்பு எண் ஆகிய விவரங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும் என விளக்கினார்.
உணவுப் பொருட்கள் கெடுவதற்கான காரணிகள் குறித்து விளக்கம்
உணவுப் பொருட்கள் மாசுபடுவதற்கும் கெடுவதற்கும் காரணமாக அமையும் மூன்று வகையான ஆபத்துக் காரணிகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
முடி, நகம், ஊசி, தூசி, மண் போன்றவை இயற்பியல் மாசுபாடுகளாகவும்; ரசாயனத் திரவங்கள் மற்றும் செயற்கை நிறமூட்டிகள் வேதியியல் மாசுபாடுகளாகவும்; பூச்சிகள், எலி, கரப்பான் பூச்சி, பல்லி மற்றும் நோய்த்தொற்று உள்ள பணியாளர்கள் உயிரியல் ஆபத்துகளாகவும் அமையக்கூடும் என விளக்கப்பட்டது.
மேலும், பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் 4D முறையில், அவை உள்ளே நுழைவதைத் தடுத்தல், தங்குவதற்கு இடமளிக்காமல் இருத்தல், உணவு கிடைக்காமல் பார்த்துக்கொள்ளுதல், அவற்றை அழித்தல் ஆகிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. உணவுப் பொருட்களைச் சேமிக்க வேண்டிய வெப்பநிலை மற்றும் கால அளவு குறித்தும் தெளிவாக விளக்கமளிக்கப்பட்டது.
செயற்கை நிறமூட்டிகள் குறித்த விழிப்புணர்வுக் கண்காட்சி
கூட்டத்தின் ஒரு பகுதியாக, இனிப்பு மற்றும் கார வகைகளில் சேர்க்கப்படும் செயற்கை நிறமூட்டிகளில் அனுமதிக்கப்பட்ட அளவு மற்றும் அனுமதிக்கப்படாத அளவு குறித்த மாதிரிகள் அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதன் மூலம் உணவுப் பொருட்களில் நிறமூட்டிகளைப் பயன்படுத்தும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து வணிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் இனிப்பு, காரம் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் விநியோகிப்பாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் அடங்கிய விழிப்புணர்வுப் புத்தகங்கள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
50-க்கும் மேற்பட்ட உணவு வணிகர்கள் பங்கேற்பு
இக்கூட்டத்தில் தர்மபுரி நகராட்சி, தர்மபுரி ஒன்றியம், பென்னாகரம், பாப்பாரப்பட்டி, ஏரியூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த இனிப்பு, காரம் தயாரிப்பாளர்கள், உணவு வணிகர்கள் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
நிறைவாக, தர்மபுரி ஹோட்டல் மற்றும் பேக்கரி சங்கச் செயலாளர் வேணுகோபால் நன்றி உரையாற்றினார்.
தமிழக வெற்றிக்குரல்