பாலக்கோட்டில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்! பல்வேறு வளர்ச்சிப் பணிகளை ஆட்சியர் சரவணன் ஆய்வு.

தருமபுரி: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்தில் நடைபெற்ற ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் சரவணன் பல்வேறு அரசு திட்டப் பணிகள், கல்வி மற்றும் மருத்துவ வசதிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அனைத்துத் துறைகளின் முதன்மை அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டமும் நடைபெற்றது.

வேளாண் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு

கரகதஅள்ளியில் அரசு மானியத்துடன் நிரந்தரக் கல்பந்தல் அமைத்து கொடிவகைக் காய்கறிகள் சாகுபடி செய்யப்படும் வயலை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். கே. செட்டிஅள்ளியில் வளர்ச்சியடைந்த பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் கால்வாய் அமைக்கும் பணியையும் ஆய்வு செய்தார்.

அதே பகுதியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் ரூ.97 ஆயிரம் மதிப்பீட்டில் அரசு மானியத்துடன் அமைக்கப்பட்ட சொட்டுநீர்ப் பாசன வசதியையும் பார்வையிட்டார்.

பொப்பிடியில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் ரூ.8,000 அரசு மானியத்துடன் காய்கறிப் பயிர்களுக்கு தாங்குக் குச்சிகள் அமைக்கப்பட்டுள்ள வயலையும் ஆய்வு செய்தார்.

பட்டாசுக் கடையில் பாதுகாப்பு ஆய்வு

கரகதஅள்ளியில் செயல்பட்டு வரும் பட்டாசுக் கடையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக உள்ளனவா, விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்து ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், எர்ரனஅள்ளி கிராம நிர்வாக அலுவலகத்திலும் ஆய்வு நடத்தினார். அரசுத் திட்டங்கள் முறையாகச் செயல்படுத்தப்படுவது மற்றும் பொதுமக்களுக்கான சேவைகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பள்ளி, மருத்துவமனைகளில் ஆய்வு

நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட சென்னப்பன் கொட்டாய் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் கல்வித்தரம் குறித்தும், அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் நிலை குறித்தும் ஆய்வு செய்தார்.

பாலக்கோடு அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் அடிப்படை வசதிகளைப் பார்வையிட்டதுடன், பேளாரஅள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வுக் கூட்டம்; பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன

ஆய்வுகளைத் தொடர்ந்து, பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் திட்டம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களும் பெறப்பட்டன.

10 மீனவப் பயனாளிகளுக்குக் குளிர்காப்புப் பெட்டிகள்

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 40 சதவீத மானிய விலையில் 10 மீனவப் பயனாளிகளுக்கு புதிய குளிர்காப்புப் பெட்டிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இந்த ஆய்வுகளின்போது மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் மதுமதி, துணை ஆட்சியர் பயிற்சி லார்சன் இஸ்ரேல், தனித்துணை ஆட்சியர் சபாதி, ஷெர்லி ஏஞ்சலா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Leave a Reply