பாலக்கோட்டில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி!

தருமபுரி: தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இப்பேரணியைக் கோட்டப் பொறியாளர் அகிலா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பாலக்கோடு உட்கோட்டப் பொறியாளர் அருட்செல்வம், உதவிப் பொறியாளர் ரஞ்சித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பாலக்கோடு உட்கோட்ட நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி, வட்டார வளர்ச்சி அலுவலகம், தக்காளி சந்தை, புறவழிச் சாலை, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பேருந்து நிலையம், கடைவீதி, காவல் நிலையம், வெள்ளிசந்தை நான்கு வழிச் சந்திப்பு, மொரப்பூர் சாலை வழியாக மின்சார வாரியம் வரை நடைபெற்றது.

சாலை விதிகளைப் பின்பற்ற வலியுறுத்தல்

பேரணியில் பங்கேற்ற நெடுஞ்சாலைத் துறைப் பணியாளர்கள், சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். “தலைக்கவசம் உயிர்க்கவசம்”, “வளைவில் முந்தாதே”, “மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதே”, “மித வேகம் மிக நன்று”, “சாலையில் சாகசம் வேண்டாம்” உள்ளிட்ட வாசகங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை முறையாகப் பின்பற்றி, தலைக்கவசம் அணிவது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தவிர்ப்பது, சாலைகளில் பாதுகாப்பான வேகத்தில் பயணிப்பது ஆகியவற்றின் அவசியத்தைப் பேரணி எடுத்துரைத்தது.

Leave a Reply