பாலக்கோடு அருகே விவசாயிகளுக்குப் பயிற்சி! பயறு வகைப் பயிர்களின் மகசூலை அதிகரிக்கத் தொழில்நுட்ப ஆலோசனைகள்!
தருமபுரி: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டாரம், பேவுஅள்ளி கிராமத்தில் வேளாண்மைத் துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான பயிற்சி நடைபெற்றது. இதில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு வேளாண் தொழில்நுட்பங்கள் மற்றும் பயிர் மேலாண்மை முறைகள் குறித்து பயிற்சி பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி வேளாண்மை இணை இயக்குநர் பழனிச்சாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, விளைநிலங்களைப் பாதுகாக்கும் இயக்கம் குறித்து உரையாற்றினார். மண் பரிசோதனையின் அடிப்படையில் உரமிடுதல், உயிர் உரங்கள் மற்றும் இயற்கை உரங்களைப் பயன்படுத்துதல், அங்கக வேளாண்மை, பசுந்தாள் உரப்பயிர்களைப் பயிரிட்டு மடக்கி உழுவதன் நன்மைகள் ஆகியவற்றை விளக்கினார். மேலும், பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதித் திட்டம் குறித்தும், ஆதார் எண்ணுடன் நில விவரங்களை இணைத்து விவசாய அடையாள எண்ணை உருவாக்குவதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார்.
பாலக்கோடு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கருப்பையா தலைமை தாங்கி, பயறு வகைப் பயிர்களில் தன்னிறைவு அடைவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். விவசாயிகள் பயறு வகைப் பயிர்களை அதிக அளவில் சாகுபடி செய்ய முன்வர வேண்டும் என வலியுறுத்தியதுடன், விதை நேர்த்தி, நவீன சாகுபடி முறைகள், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, மகசூலை அதிகரிக்கும் தொழில்நுட்பங்கள் குறித்தும் விளக்கினார்.
பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய துணைப் பேராசிரியர் வெங்கடேசன், பயறு வகைப் பயிர்களுக்கு ஏற்ற ரகங்களைத் தேர்வு செய்தல், சான்றளிக்கப்பட்ட விதைகளைப் பயன்படுத்துதல், விதை நேர்த்தி செய்தல் மற்றும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் சாகுபடிச் செலவைக் குறைப்பது குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
இப்கோ கள அலுவலர் அருண்குமார், பயறு வகைப் பயிர்களில் டிஏபி கரைசலை இலைவழியாகத் தெளிப்பதன் அவசியம் மற்றும் நன்மைகள் குறித்து பயிற்சி அளித்தார். பயிர்களின் வளர்ச்சி மற்றும் பூக்கும் பருவத்தில் ஊட்டச்சத்து மேலாண்மையின் முக்கியத்துவம், பரிந்துரைக்கப்பட்ட அளவில் உரங்களைப் பயன்படுத்துதல், சரியான தெளிப்பு முறை மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விளக்கினார். இதன் மூலம் பயிர்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்தி விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
உதவி வேளாண்மை அலுவலர் முருகன், பயறு வகைப் பயிர்களில் ‘பயறு ஒண்டர்’ தெளிப்பதால் பூக்கும் திறன் அதிகரிக்கக்கூடும் என எடுத்துரைத்தார்.
இப்பயிற்சிக்கான முன்னேற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் தமிழ்செல்வி மற்றும் அருள்குமார் ஆகியோர் செய்திருந்தனர். இப்பயிற்சியில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றுப் பயனடைந்தனர்.
தமிழக வெற்றிக்குரல்