பாலக்கோடு அருகே நீர்வழிக் கால்வாய்களைத் தூர்வாராததால் விளைநிலங்களில் புகுந்த மழைநீர்! பயிர்கள் சேதம்; ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பு என விவசாயிகள் வேதனை.
தேசிய நெடுஞ்சாலையிலிருந்து வெளியேறிய மழைநீர் வயல்களுக்குள் புகுந்ததாகப் புகார் – கால்வாய்களைச் சீரமைத்து நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
பாலக்கோடு: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட செல்லியம்பட்டி ஊராட்சி, அல்லியூர் மற்றும் கொல்லன்கொட்டாய் கிராமங்களில் மழைநீர் வடிகால் கால்வாய்கள் முறையாகத் தூர்வாரப்படாததால், விளைநிலங்களுக்குள் மழைநீர் புகுந்து பயிர்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இப்பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் கால்வாய்களில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் மற்றும் முட்செடிகள் அதிகளவில் தேங்கிப் புதர்போல் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் மழைநீர் தடையின்றி வெளியேற முடியாமல் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தியுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
பாலக்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு பெய்த கனமழையில், இப்பகுதியில் அதிகபட்சமாக 49.2 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய நெடுஞ்சாலையிலிருந்து வெளியேறும் மழைநீர் வயல்வெளிகளுக்குள் புகுந்து விளைநிலங்களைப் பாதிப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
இதன் காரணமாகச் சாம்பல் பூசணிக்காய், சம்பங்கி பூ, மிளகாய், மஞ்சள், சோளம் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டுள்ள நிலங்களில் மழைநீர் தேங்கி சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். இதனால் ஏக்கருக்கு சுமார் ரூ.30 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, பாதிக்கப்பட்ட விளைநிலங்களை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மழைநீர் வடிகால் கால்வாய்களை முறையாகத் தூர்வாரி, பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் புதர்களை அகற்றி, எதிர்காலத்தில் விளைநிலங்களுக்குள் மழைநீர் புகுவதைத் தடுக்க ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக வெற்றிக்குரல்