DLR கல்லூரியில் தமிழ் இலக்கியம் குறித்த ஒரு நாள் கருத்தரங்கம்!

“தமிழ் இலக்கியங்களை ஏன் பயில வேண்டும்?” – மாணவர்களுக்கு விளக்கமளித்த தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் ஜா. வளர்மதி

ஆற்காடு, அக். 26: இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த விளாப்பாக்கத்தில் அமைந்துள்ள DLR கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்த்துறை சார்பில் தமிழ் இலக்கியம் குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்குக் கல்லூரித் தலைவர் டி.எல். ரவி மற்றும் தாளாளர் கோமதி ஆகியோர் தலைமை வகித்தனர். கல்லூரி முதல்வர் தெ. கௌதமன் மற்றும் புலமுதன்மையர் பா. நிர்மலா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்த்துறைத் தலைவர் த. யோகலட்சுமி வரவேற்புரை ஆற்றினார்.

கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் ஜா. வளர்மதி, “தமிழ் இலக்கியங்களை ஏன் பயில வேண்டும்?” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

அப்போது, தமிழ் மொழி மற்றும் இலக்கியங்களின் சிறப்புகள், தமிழ் இலக்கியங்களைப் பயில்வதன் அவசியம், மாணவர்களின் கல்வி மற்றும் அறிவு வளர்ச்சியில் இலக்கியங்கள் வகிக்கும் பங்கு ஆகியவை குறித்து விரிவாக எடுத்துரைத்தார். தமிழ் இலக்கியங்கள் மூலம் மொழித்திறன், சிந்தனைத் திறன் மற்றும் வாழ்வியல் மதிப்புகளை வளர்த்துக்கொள்ள முடியும் என்பதையும் விளக்கினார்.

தமிழ் இலக்கியங்களின் தொன்மை, பண்பாட்டு அடையாளங்கள் மற்றும் சமூகச் சிந்தனைகளை மாணவர்கள் அறிந்துகொள்வதன் முக்கியத்துவம் குறித்தும் கருத்தரங்கில் எடுத்துரைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியைத் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் தி. திவ்யபாரதி தொகுத்து வழங்கினார். பேராசிரியர் ந. ஆகாஷ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழிநடத்தினார். இறுதியாகத் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் ச. வெங்கடேசன் நன்றியுரை வழங்கினார். நாட்டுப்பண்ணுடன் கருத்தரங்கம் இனிதே நிறைவடைந்தது.

Leave a Reply