உறவுகள் யாரென்று தெரியாதவருக்கும் இறுதி மரியாதை! 245 உடல்களை நல்லடக்கம் செய்த ‘மை தருமபுரி’ அமைப்பு.
தருமபுரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் போக்குவரத்துக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சாலை விபத்தில் படுகாயமடைந்த அடையாளம் தெரியாத நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரைத் தங்களது உறவினராகக் கருதி, ‘மை தருமபுரி’ அமைப்பினர் இறுதி மரியாதையுடன் நல்லடக்கம் செய்தனர்.
அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு
சுமார் 35 வயது மதிக்கத்தக்க அந்த நபர் சாலையோர விபத்தில் படுகாயமடைந்ததைத் தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரைப் பற்றிய விவரங்களை விசாரித்தபோதும் அடையாளம் காண்பதற்கான தகவல்கள் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மனிதநேயத்துடன் இறுதி அஞ்சலி
உயிரிழந்தவரின் உடலை ‘மை தருமபுரி’ அமைப்பினர் பொறுப்பேற்று, உரிய இறுதி மரியாதை செலுத்தி நல்லடக்கம் செய்தனர். இந்தப் பணியில் ஓசூர் போக்குவரத்து சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் வெங்கடாசலம், ‘மை தருமபுரி’ நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, அமைப்பாளர்கள் கிருஷ்ணன், சண்முகம் மற்றும் சென்னை கைங்கர்யா அறக்கட்டளையைச் சேர்ந்த குமார் ஆகியோர் ஒத்துழைப்பு வழங்கினர்.
இதுவரை 245 உடல்கள் நல்லடக்கம்
‘மை தருமபுரி’ அமைப்பின் அமரர் சேவைப் பிரிவு மூலம் இதுவரை 245 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைப்பினர் தெரிவித்தனர். உறவினர்கள் யாரென்று தெரியாத நிலையிலும், உயிரிழந்தவர்களுக்கு உரிய இறுதி மரியாதை அளித்து நல்லடக்கம் செய்த இந்தச் செயல் மனிதநேயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
தமிழக வெற்றிக்குரல்