பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 45 அம்சக் கோரிக்கைகள்: ராணிப்பேட்டையில் அரசு ஊழியர்கள் தர்ணா!
ராணிப்பேட்டை, அக். 28: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 45 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்
தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கான (TAPS) விதிமுறைகளை உடனடியாக வெளியிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மேலும், சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் முறையான காலமுறை ஊதியம் வழங்குவதுடன், TAPS உள்ளிட்ட அனைத்து ஓய்வூதியப் பலன்களையும் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை
மருத்துவத் துறையில் வெளிப்பணி ஒப்படைப்பு மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான நியமனங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும், அரசுத் துறைகளில் காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.
மாநிலச் செயலாளர் சிறப்புரை
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ம. எழில் இளம்வழுதி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தை, மாநிலச் செயலாளர் வே. விஜயகுமார் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் வே. பர்சிலா வான சாஸ்திரி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் எஸ். ஜோசப் கென்னடி, அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் நா. சுந்தரேசன், ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் செ. சரவணன், முன்னாள் மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ். முரளி தாஸ், ஊரக வளர்ச்சித் துறை முன்னாள் மாவட்டத் தலைவர் ஆர். மோகன், மாவட்டப் பொருளாளர் உமாபதி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
ஏராளமான அரசு ஊழியர்கள் பங்கேற்பு
மாவட்ட நிர்வாகிகள் ஜெ. மகேஸ்வரி, கு. புஷ்பராஜ், இரா. பூபதி, எஸ். கீதா உள்ளிட்ட ஏராளமான அரசு ஊழியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அரசுத் துறை ஓய்வூதியர் சங்க மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் பி. கிருஷ்ணமூர்த்தி தர்ணாவை நிறைவு செய்து பேசினார். இறுதியில், மாவட்டப் பொருளாளர் மு. ஆனந்தபாபு நன்றியுரையாற்றினார்.
தமிழக வெற்றிக்குரல்