தலைக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.1,000 அபராதம்! ஓட்டுநர் உரிமம் இடைநீக்கமும் செய்யப்படும் – இராணிப்பேட்டை காவல்துறை எச்சரிக்கை!
இராணிப்பேட்டை: மாவட்டத்தில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் காயங்களைக் குறைத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இருசக்கர வாகன ஓட்டுநர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் தலைக்கவசம் அணிவதை உறுதி செய்யும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
ஓட்டுநர், பின்னால் அமர்பவர் இருவரும் தலைக்கவசம் அணிவது கட்டாயம்!
இருசக்கர வாகன விபத்துகளின்போது தலைக்கவசம் அணியாததால் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழும் அபாயம் அதிகமாக உள்ளது. இதனைத் தடுக்கும் வகையில், இருசக்கர வாகனத்தை ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்து பயணிப்பவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் எனக் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
மோட்டார் வாகனச் சட்டம், 1988-ன் பிரிவு 129-ன்படி, இருசக்கர வாகன ஓட்டுநரும் பின்னிருக்கையில் அமர்ந்து பயணிப்பவரும் தலைக்கவசம் அணிவது கட்டாயமாகும். தலைக்கவசம் அணியாமல் பயணிப்பவர்களுக்கு பிரிவு 194D-ன்படி ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுவதுடன், ஓட்டுநர் உரிமத்தை மூன்று மாதங்களுக்கு இடைநீக்கம் செய்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனத் தணிக்கையில் தீவிரக் கண்காணிப்பு
இராணிப்பேட்டை மாவட்டத்தில் வாகனத் தணிக்கை மற்றும் ரோந்துப் பணிகளின்போது, இருசக்கர வாகன ஓட்டுநர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் தலைக்கவசம் அணிந்துள்ளனரா என்பது தீவிரமாகக் கண்காணிக்கப்படும். விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.
மேலும், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், கைப்பேசியில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்களைத் தவிர்த்து, சாலை விதிகளை முறையாகப் பின்பற்றுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு காவல்துறை வேண்டுகோள்
தலைக்கவசம் அணிவதையும், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவதையும் அன்றாடப் பழக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்கவும், பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும் பொதுமக்கள் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
“தலைக்கவசம் அணிவோம்; உயிரிழப்புகளைத் தடுப்போம்; சாலை விபத்தில்லா இராணிப்பேட்டை மாவட்டத்தை உருவாக்குவோம்” என்ற விழிப்புணர்வு வாசகத்துடன் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழக வெற்றிக்குரல்