திருப்பத்தூரில் ரூ.15 கோடியில் நவீன மாவட்ட விளையாட்டு அரங்கம்! கட்டுமானப் பணிகளை ஆட்சியர் ஆய்வு.

திருப்பத்தூர்: திருப்பத்தூர் ராஜீவ் காந்தி விளையாட்டு மைதானத்தில் சுமார் ரூ.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நவீன மாவட்ட விளையாட்டு அரங்கத்தின் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் வே. நல்லசிவன் மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் என். திருப்பதி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

பல்வேறு விளையாட்டுகளுக்கான வசதிகள்

கடந்த 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், இறகுப்பந்து, கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, கபடி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான பயிற்சி வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும், உடற்பயிற்சிக் கூடம், தங்கும் விடுதி, உணவகம் மற்றும் ஓடுதளப் பாதை உள்ளிட்ட வசதிகளுடன் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் வகையில் இந்த விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது.

நிலுவைப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

கட்டுமானப் பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்துள்ள நிலையில், சில பணிகள் இன்னும் முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன. இதையடுத்து, விளையாட்டு அரங்கத்தின் பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர், நிறைவடைந்த பணிகள் மற்றும் நிலுவையில் உள்ள பணிகளின் நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

அப்போது, மீதமுள்ள கட்டுமானப் பணிகளைத் தாமதமின்றி விரைந்து முடித்து, விளையாட்டு அரங்கத்தை விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வே. நல்லசிவன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயகுமாரி மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Leave a Reply