10 மாவட்டங்களில் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு புதிய வாய்ப்பு!
10 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உருவாக்கத் திட்டம் – தகுதியான ஆலோசகர்கள், நிறுவனங்களிடம் இருந்து நவ.10-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை – அக்டோபர் 30: ஆதிதிராவிட விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் நிறுவனங்களை (FPO/FPC) உருவாக்கி, பதிவு செய்து, வலுப்படுத்த ஆதிதிராவிடர் நல இயக்குநரகம் திட்டமிட்டுள்ளது. இதற்காகத் தகுதியுள்ள தனிநபர் ஆலோசகர்கள், நிறுவனங்கள், முகமைகள் மற்றும் வல்லுநர்களிடமிருந்து விலைப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன.
ஆதிதிராவிடர் நல இயக்குநரகத்தின் 2026–2027ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு எண் 49-இன்படி, கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, திருவள்ளூர், திண்டுக்கல் மற்றும் தருமபுரி ஆகிய 10 மாவட்டங்களில் தலா ஓர் உழவர் உற்பத்தியாளர் அமைப்பு அல்லது நிறுவனம் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இந்தத் திட்டத்திற்காக மூன்று வகைகளில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வகை 1 – தனிநபர் ஆலோசகர்கள்: நிறுவனச் செயலர், பட்டயக் கணக்காளர் (CA) அல்லது வேளாண் வணிக வல்லுநராக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் மூன்று உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் அல்லது நிறுவனங்களை உருவாக்கிப் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும், அந்த அமைப்புகள் குறைந்தது மூன்று ஆண்டுகள் வெற்றிகரமாகச் செயல்பட்டிருக்க வேண்டும்.
வகை 2 – நிறுவனங்கள் மற்றும் முகமைகள்: நிறுவனங்கள், முகமைகள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தணிக்கை நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். FPO/FPC உருவாக்கத்தில் குறைந்தது மூன்று ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும், குறைந்தபட்சம் மூன்று உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளைப் பதிவு செய்து, அவை மூன்று ஆண்டுகள் வெற்றிகரமாகச் செயல்பட்டிருக்க வேண்டும்.
வகை 3 – பதிவு செய்யப்பட்ட FPO/FPC அமைப்புகள்: பதிவு செய்யப்பட்ட உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் குறைந்தது மூன்று ஆண்டுகள் வெற்றிகரமாகச் செயல்பட்டிருக்க வேண்டும். ஏற்றுமதி, டிஜிட்டல் சந்தைப்படுத்தல் அல்லது மின்வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதற்கான ஆதாரங்களுடன் கூடிய வெற்றிகரமான வணிகச் செயல்பாட்டு பதிவுகளும் இருக்க வேண்டும்.
ஆதிதிராவிடர் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை!
இந்தத் திட்டத்தில் ஆதிதிராவிடர் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதேபோல், வகை 2 மற்றும் வகை 3 பிரிவுகளில் விண்ணப்பிக்கும் நிறுவனங்களின் இயக்குநர் குழு மற்றும் உறுப்பினர்களில் குறைந்தது 50 சதவீதம் பேர் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி? கடைசி நாள் எப்போது?
விருப்பமும் தகுதியும் உள்ள தனிநபர்கள், முகமைகள் மற்றும் நிறுவனங்கள் விலைப்புள்ளி விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அதன் அச்சுப் பிரதியை (Hard Copy) மூடிய உறையில் கீழ்க்கண்ட முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
இயக்குநர்,
ஆதிதிராவிடர் நல இயக்குநரகம்,
எழிலகம், சென்னை – 05.
மேலும், விண்ணப்பத்தின் மென்பிரதியை (Soft Copy) adw.director@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 10.11.2026, மாலை 5.30 மணி.
இத்திட்டம் தொடர்பான முழுமையான விவரங்கள், தகுதிகள் மற்றும் விண்ணப்பப் படிவங்களை ஆதிதிராவிடர் நலத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnadw.tn.gov.in என்ற முகவரியில் பெற்றுக்கொள்ளலாம் என ஆதிதிராவிடர் நல இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
தமிழக வெற்றிக்குரல்