ஆவடி கனகவள்ளி அம்மன் ஆலயத்தில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கோலாகலம்! ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!
ஆவடி: சென்னை, ஆவடி ஆதிபராசக்தி நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கனகவள்ளி அம்மன் ஆலயத்தில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பல்வேறு கால யாகசாலை பூஜைகள், ஹோமங்கள் மற்றும் சிறப்பு வழிபாடுகளைத் தொடர்ந்து விமானம் மற்றும் பரிவார தெய்வங்களுக்குக் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
சிறப்பு ஹோமங்கள், யாகசாலை பூஜைகள்
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அனுஜ்ஞை, யஜமான சங்கல்பம், கணபதி பிரார்த்தனை, புண்யாஹவாசனம், மகா கணபதி, லட்சுமி, நவக்கிரக ஹோமங்கள் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து பூர்ணாஹுதி, தீபாராதனை மற்றும் பிரசாத விநியோகம் நடைபெற்றது.
இதையடுத்து விக்னேஸ்வர பூஜை, மிருத்சங்கிரஹணம், அங்குரார்ப்பணம், வாஸ்து சாந்தி ஹோமம், பிரவேசபலி, ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், கலாகர்ஷணம் உள்ளிட்ட வைபவங்கள் நடைபெற்றன. முதற்கால யாகசாலை பூஜை தொடங்கி, திரவ்யாஹுதி, பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
நான்கு கால யாகசாலை பூஜைகள்
தொடர்ந்து கோ பூஜை, பிரம்மச்சாரி பூஜை, கன்யா பூஜை, சுமங்கலி பூஜை உள்ளிட்ட வழிபாடுகளுடன் இரண்டாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இதில் மூலமந்திரம் மற்றும் மாலாமந்திர ஹோமங்கள், விமான கலச ஸ்தாபனம், பூர்ணாஹுதி, தீபாராதனை ஆகியவை இடம்பெற்றன.
மூன்றாம் கால யாகசாலை பூஜையைத் தொடர்ந்து சிறப்பு ஹோமங்கள், பூர்ணாஹுதி, மகா தீபாராதனை மற்றும் நைவேத்தியம் நடைபெற்றன. மேலும், அனைத்து சுவாமி திருமேனிகளுக்கும் அஷ்டபந்தன மருந்து சாற்றும் நிகழ்வும் நடைபெற்றது.
தொடர்ந்து பிம்பசுத்தி, நாடி சந்தானம், ஸ்பரிசாஹுதி, தத்துவார்ச்சனை உள்ளிட்ட வைபவங்களுடன் நான்காம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. மூலமந்திர ஹோமம், மகா பூர்ணாஹுதி, தீபாராதனை மற்றும் மகா நைவேத்தியத்தைத் தொடர்ந்து யாத்ராதானம் மற்றும் குடம் புறப்பாடு நடைபெற்றது.
விமானம், பரிவார தெய்வங்களுக்குக் கும்பாபிஷேகம்
இதனைத் தொடர்ந்து ஆலய விமானத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவின் நிறைவாக பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழக வெற்றிக்குரல்