ஆவடி அருகே 300 மாணவர்கள் இணைந்து உலக சாதனை! 30 நிமிடங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட அபாகஸ் கணக்குகள் செய்து அசத்தல்!

ஆவடி: சென்னை புறநகர் பகுதியான ஆவடி அருகே கொள்ளுமேடு பகுதியில் உள்ள நபி கிரசென்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியில், அபாகஸ் கணிதம் மற்றும் கலை, கைவினைப் பிரிவுகளில் மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, அபாகஸ் முறையில் 30 நிமிடங்களில் 2 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளைச் செய்து சாதனை படைத்தனர்.

30 நிமிடங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்குகள்!

இன்ஃபினிட்டி புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த நான்கு பள்ளிகளின் மாணவர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பத்து வரிசைகளைக் கொண்ட அபாகஸ் கருவியைப் பயன்படுத்தி, ஒற்றை இலக்கக் கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குகளை மாணவர்கள் ஒரே நேரத்தில் மேற்கொண்டனர். தொடர்ந்து 30 நிமிடங்களில் 2 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளைச் செய்து தங்களது கணிதத் திறனை வெளிப்படுத்தினர்.

கலை மற்றும் கைவினைப் படைப்புகளிலும் அசத்தல்!

அபாகஸ் கணிதச் சாதனையுடன், கலை மற்றும் கைவினைப் பிரிவிலும் மாணவர்கள் தங்களது படைப்பாற்றலை வெளிப்படுத்தினர். 20 நிமிடங்களில் வண்ணம் தீட்டுதல், அரிசியைப் பயன்படுத்திப் பல்வேறு வண்ணங்களில் ஒட்டுப்படங்கள் உருவாக்குதல் உள்ளிட்ட கைவினைப் பணிகளையும் மேற்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆர். கிரேசி செய்திருந்தார். சிறப்பு அழைப்பாளராகத் திரைப்பட நடிகர் விஜய் ஜாஸ்பர் கலந்து கொண்டு மாணவர்களின் சாதனை நிகழ்வைப் பார்வையிட்டார்.

உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த நிகழ்வு

மாணவர்களின் இந்தச் சாதனை இன்ஃபினிட்டி புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது. இதற்கான சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் கேடயங்கள் நபி கிரசென்ட் பள்ளியின் தாளாளர் முகமது உசேனிடம் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Leave a Reply