காலி மதுபாட்டில் திரும்பப் பெறும் திட்டத்திற்கு தனி ஊழியர்கள் நியமிக்கக் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் இரவிலும் போராட்டம்!

அம்பத்தூர்: காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெற்று, நுகர்வோருக்கு ரூ.10 வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தத் தனி ஊழியர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி, சென்னை மாவட்ட அனைத்து சங்க டாஸ்மாக் பணியாளர்கள் இரவிலும் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

8 மணி நேரத்தைக் கடந்த போராட்டம்

அம்பத்தூரில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கிடங்கு முன்பு நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தால், பணியாளர்கள் மதுக்கடைகளைத் திறக்காமல் 8 மணி நேரத்திற்கும் மேலாகப் பணியைப் புறக்கணித்துள்ளனர். காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெற்று ரூ.10 வழங்கும் அரசின் திட்டத்தைச் செயல்படுத்துவதில் உள்ள பணிச்சுமை காரணமாகப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

பேச்சுவார்த்தை தோல்வி

காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்திற்காகத் தனியாகப் புதிய ஊழியர்களை அரசு நியமிக்க வேண்டும் என்பதே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.

இதுதொடர்பாக நடைபெற்ற இரண்டு கட்டப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தைத் தொடரப் பணியாளர்கள் முடிவு செய்துள்ளதால், அம்பத்தூரில் இரவிலும் போராட்டம் நீடித்து வருகிறது.

Leave a Reply