“தப்புனா தப்புதான்.. மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம்!” — டாஸ்மாக்கில் அமைச்சர் விக்னேஷ் அதிரடி!
சென்னை:
டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையைவிட கூடுதலாக மதுபானங்களை விற்பனை செய்வது உள்ளிட்ட முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தவெக அரசு அதிரடி நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட ஒரு ரூபாய் கூடுதலாக வசூலித்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் திட்டவட்டமாக எச்சரித்துள்ளார்.
இதன்படி, முதல் முறையாக கூடுதல் விலை வசூலிப்பது கண்டறியப்பட்டால் 3 மாதங்கள் பணியிடைநீக்கம் செய்யப்படுவதுடன், மீண்டும் அதே தவறு தொடர்ந்தால் நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என கடும் விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமைச்சரின் உத்தரவின் அடிப்படையில், மதுபானங்களுக்கு கூடுதல் தொகை வசூலித்ததாக கிடைத்த புகார்களைத் தொடர்ந்து ஒரே நாளில் 67 டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விதிமீறல்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதேநேரத்தில், டாஸ்மாக் ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கும் தவெக அரசு முக்கியத்துவம் அளித்துள்ளது. ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, வார விடுமுறை, மாதாந்திர விடுப்பு, பண்டிகைக் கால முன்பணம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்றியுள்ள நிலையில், பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற நிலைப்பாட்டை அமைச்சர் விக்னேஷ் தெளிவுபடுத்தியுள்ளார்.
“தவறு செய்தால் தவறுதான்; எந்த அழுத்தத்திற்கும் பணியமாட்டோம்” என்ற உறுதியான நிலைப்பாட்டுடன் டாஸ்மாக் முறைகேடுகளை ஒழிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
இதனால், டாஸ்மாக் விற்பனையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்து, கூடுதல் வசூல் முறைகேட்டுக்கு கடிவாளம் போடும் நடவடிக்கையில் தவெக அரசு தீவிரமாக இறங்கியுள்ளது என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே உருவாகியுள்ளது.
தமிழக வெற்றிக்குரல்