“தவறு செய்தால் யாராக இருந்தாலும் தப்ப முடியாது!” — விருதுநகரில் அமைச்சர் கீர்த்தனா அதிரடி.
விருதுநகர்: லஞ்சம் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக தமிழக வெற்றிக் கழக அரசு கடும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், விருதுநகரில் பட்டாசுக் கடைக்கு தடையின்மைச் சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரில் தீயணைப்புத்துறை அலுவலர் ஒருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வெம்பக்கோட்டை அருகே வசிக்கும் மாற்றுத்திறனாளியான சுப்புராஜ், பட்டாசுக் கடை நடத்துவதற்கான உரிமம் பெற முயன்றபோது, தீயணைப்புத்துறையிடம் தடையின்மைச் சான்றிதழ் பெறுவதற்காக அலுவலர் செந்தூர்பாண்டியன் லஞ்சம் கேட்டு அலைக்கழித்ததாக குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலான கவனத்தைப் பெற்றது.
இதையடுத்து நடைபெற்ற துறைரீதியான விசாரணையில், சுப்புராஜிடம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தீயணைப்புத்துறை அலுவலர் செந்தூர்பாண்டியன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, லஞ்சம் மற்றும் தவறுகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும், “லஞ்சம் வாங்கினாலும் சரி, தவறு செய்தாலும் சரி யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி. இது தொடக்கம் மட்டுமே. மாற்றம் வரும் வரை நடவடிக்கை தொடரும். தவறு செய்தவர் யாராக இருந்தாலும் தப்ப முடியாது” என அமைச்சர் கீர்த்தனா தனது சமூக வலைதளப் பதிவில் எச்சரித்துள்ளார்.
லஞ்சம் தொடர்பான புகார்கள் பொதுமக்களிடமிருந்து பெறுவதற்காக வாட்ஸ்அப் எண்ணையும் அமைச்சர் கீர்த்தனா வெளியிட்டுள்ளார். இதன் மூலம் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் அரசு தீவிரம் காட்டி வருவது தெரிய வருகிறது.
“யாராக இருந்தாலும் நடவடிக்கை” என்ற தவெக அரசின் உறுதியான நிலைப்பாடு, அரசு அலுவலகங்களில் லஞ்ச முறைகேடுகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மேலும் தீவிரமாகும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக்குரல்