கக்கதாசம் மக்களின் கோரிக்கை உடனடி நிறைவேற்றம்..! 108 ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம் — அமைச்சர் அருண்ராஜுக்கு கிராம மக்கள் நன்றி!

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி தொகுதி கக்கதாசம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் மாண்புமிகு சி. ஜோசப் விஜய் அவர்களின் அவர்களின் உத்தரவின்பேரிலும், கக்கதாசம் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜை, கக்கதாசம் பகுதி பொதுமக்கள் நேரில் சந்தித்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 108 ஆம்புலன்ஸ் சேவை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த கோரிக்கையைத் தொடர்ந்து, பொதுமக்களின் அவசர மருத்துவத் தேவைகளுக்கு பெரிதும் உதவும் வகையில் கக்கதாசம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

கக்கதாசம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைச்சர் அருண்ராஜின் பழைய பணியிடமாகவும் இருந்துள்ளது. அவர் கடந்த 2004ஆம் ஆண்டு அங்கு மருத்துவராக பணியாற்றியதாகவும், சமீபத்திய கிருஷ்ணகிரி மாவட்ட சுற்றுப்பயணத்தின்போது அந்த மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

புதிய 108 ஆம்புலன்ஸ் சேவையை, தமிழக வெற்றிக் கழக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் எஸ். வேந்தர்க்கரசன் (வடிவேல்), மத்திய மாவட்ட செயலாளர் ஜி. சுரேஷ் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சச்சரிதா சுப்ரமணி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள், கக்கதாசம் பகுதி பொதுமக்கள், மாவட்ட, ஒன்றிய, பேரூராட்சி மற்றும் சார்பு அணிகளைச் சேர்ந்த கழகத் தோழர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மக்களின் கோரிக்கையை கேட்டறிந்து, அதனை விரைந்து நிறைவேற்றிய தமிழக வெற்றிக் கழக அரசுக்கு பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

Leave a Reply