நவ.1க்குள் தமிழில் பெயர் பலகை..! கடைகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

சென்னை:

தமிழகத்தில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளை நவம்பர் 1ஆம் தேதிக்குள் தமிழில் மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடைகளின் பெயர் பலகைகளில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. அதன்படி, பெயர் பலகையில் தமிழில் பெயர் இடம்பெற வேண்டும் என்றும், அதன் கீழ் ஆங்கிலத்தில் பெயரை குறிப்பிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக இந்திய சில்லறை வர்த்தகர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு நீதிபதி கே. சுரேந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்த தயாராக இருப்பதாகவும், அதற்காக மூன்று மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கடைசி வாய்ப்பாக நவம்பர் 1ஆம் தேதிக்குள் கடைகளின் பெயர் பலகைகளை தமிழில் மாற்ற வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், உத்தரவை பின்பற்றாத கடைகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் நடைமுறை மேலும் தீவிரமாக அமல்படுத்தப்பட உள்ளது.

Leave a Reply