சாஸ்திரி நகர் கொலை வழக்கில் 5 பேர் கைது..! கத்தியால் தாக்கி கொன்ற வழக்கில் போலீஸ் அதிரடி

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கண்ணன் (45) என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 5 பேரை சென்னை பெருநகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

IT நிறுவனங்களுக்கு கார்களை வாடகைக்கு விட்டு தொழில் செய்து வந்த கண்ணன், J-5 சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் சரித்திரப் பதிவேடு குற்றவாளியாக இருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதனால் அவரது நடவடிக்கைகளை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி இரவு, ராமசாமி அவென்யூ, எல்லையம்மன் கோயில் தெருவில் கண்ணன் நின்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அவரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த கண்ணன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அவரது சித்தி மகன் புருஷோத்தமன் (33) அளித்த புகாரின் பேரில், J-5 சாஸ்திரி நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தனிப்படை அமைத்து விசாரணை

கொலை சம்பவத்தைத் தொடர்ந்து குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில், காவல் மாவட்ட துணை ஆணையர் கண்காணிப்பில் உதவி ஆணையர் மற்றும் J-5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி, குற்றவாளிகளை அடையாளம் கண்டு இன்று (செப்டம்பர் 6) 5 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள்:

  • பரணி (20) – ருக்மணி நகர், அடையார், சென்னை
  • ராகேஷ் (20) – கோவிந்தராஜபுரம், அடையார், சென்னை
  • நரேஷ் (20) – பெரியார் நகர், திருவான்மியூர், சென்னை
  • மணிகண்டன் (20) – கோட்டூர், சென்னை
  • ஹரிஹரன் (20) – இந்திரா நகர், அடையார், சென்னை

பழைய பகை காரணமா?

காவல்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 2009-ஆம் ஆண்டு அடையார் பகுதியில் எதிரி பரணியின் பெரியப்பா சிவா என்பவர் கண்ணன் மற்றும் அவரது கூட்டாளிகளால் கொலை செய்யப்பட்டதாகவும், அதன்பின்னர் சிவாவின் தந்தை வேலு என்பவர் கடந்த 2016-ஆம் ஆண்டு சிறைப்பேட்டை பகுதியில் கொலை செய்யப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த முன்விரோதம் காரணமாகவே கண்ணன் தனது நண்பர்களுடன் சேர்ந்து சிவாவை கொலை செய்துள்ளதாக தெரியவந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply