கிருஷ்ணகிரியில் முதல்வர் கோப்பை போட்டிகள்..! செப்.9 முதல் தொடக்கம்
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2026-ஆம் ஆண்டுக்கான முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி தொடங்கி, 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன.
இதில் தடகளம், இறகுப்பந்து, பூப்பந்து, கூடைப்பந்து, கேரம், சதுரங்கம், கபடி, கையுந்துப்பந்து, கைப்பந்து, ஹாக்கி, கோ-கோ, யோகா, கிரிக்கெட், கால்பந்து, சிலம்பம், ஸ்பீட் ஸ்கேட்டிங், நீச்சல், மேசைப்பந்து, எறிபந்து மற்றும் அடாப்டெட் வாலிபால் உள்ளிட்ட 22 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன.
போட்டிகள் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் விளையாட்டு வளாகங்கள், கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரி, ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரி, காவேரிப்பட்டணம், நாகரசம்பட்டி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கந்திகுப்பம் கிங்ஸ்லி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளன.
போட்டிகளில் பங்கேற்பது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தைப் பார்வையிடலாம். மேலும், கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை 04343-291727 என்ற எண்ணிலும், ஆடுகளம் தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9514000777 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் நடராஜ முருகன் தெரிவித்துள்ளார்.
மாவட்ட அளவில் நடைபெறும் இந்தப் போட்டிகள் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் விளையாட்டு வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பு உருவாகியுள்ளது.
தமிழக வெற்றிக்குரல்