வெயிலில் இருந்து தப்பிக்க குட்டையில் குளித்த யானைகள்..! அஞ்செட்டியில் குவிந்த பார்வையாளர்கள்

அஞ்செட்டி:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட அஞ்செட்டி வனச்சரகத்தில், வெயிலின் தாக்கத்தை தணித்துக்கொள்ள 12-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் குட்டிகளுடன் குட்டையில் நீராடிய காட்சி பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.

நாட்றாம்பாளையம் அடுத்த மஞ்சுமலை அருகே வனப்பகுதிக்குள் உள்ள குட்டைக்கு வந்த யானைகள் முதலில் தண்ணீர் அருந்தியதுடன், பின்னர் குட்டிகளுடன் நீண்ட நேரம் தண்ணீரில் விளையாடி ஆனந்தமாக குளித்தன. இந்த காட்சியை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் தங்களது செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவு செய்தனர்.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் குட்டையில் சிறிது நேரம் தங்கிய யானைகள், பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றன. யானைகள் குட்டிகளுடன் நீராடிய காட்சி தற்போது அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.

இதனிடையே, கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து ஆண்டுதோறும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் 200-க்கும் மேற்பட்ட யானைகள் ஓசூர் வனக்கோட்டத்திற்கு இடம்பெயர்வது வழக்கம். தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, உரிகம், ஜவளகிரி, ஓசூர், ராயக்கோட்டை உள்ளிட்ட வனச்சரகங்கள் வழியாக யானைகள் நடமாட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யானைகள் இடம்பெயர்வு தொடங்க உள்ள நிலையில், மனிதர்கள் மற்றும் யானைகள் இடையேயான மோதல்களைத் தவிர்க்க வனத்துறையினர் தமிழக எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர். ஓசூர் வனக்கோட்டத்தில் யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க நவீன தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

Leave a Reply