கிருஷ்ணகிரியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை..! விவசாய சங்க கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வறட்சி நிலவி வருவதால், மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ் மாநில விவசாய சங்க கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பர்கூர் தாலுகா பட்லப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கொங்கன் தெரு கிராமத்தில் தமிழ் மாநில விவசாய சங்க தொடக்க விழா நடைபெற்றது. வட்டக்குழு உறுப்பினர் சார்லஸ் தலைமை வகித்தார். விவசாய தொழிலாளர் சங்கத் தலைவர் கண்ணு, விவசாய தொழிலாளர்களின் பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசினார்.
கூட்டத்தில் பூங்கொடி சங்கத் தலைவராகவும், சரிதா செயலாளராகவும், செல்வி பொருளாளராகவும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். வட்டக்குழு உறுப்பினர் கல்பனா நன்றி கூறினார்.
கூட்டத்தில், புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். தமிழக அரசு அறிவித்தபடி அனைவருக்கும் 125 நாட்கள் வேலை வழங்க வேண்டும். வேலை செய்ய முடியாத முதியோருக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், வீடு இல்லாத விவசாய தொழிலாளர்களுக்கு வீட்டுமனை ஒதுக்கி வீடு கட்டித்தர வேண்டும் என்றும், பட்டா வழங்கப்படாமல் உள்ள விவசாய தொழிலாளர்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பள்ளி மாணவர்களின் நலன் கருதி, திருப்பத்தூரில் இருந்து கோத்தலகுட்டா வழியாக பர்கூருக்கு மீண்டும் பி10 பேருந்தை இயக்க வேண்டும் என்றும், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
முக்கியமாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலவும் வறட்சியை கருத்தில் கொண்டு, மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அரசு அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானமும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
தமிழக வெற்றிக்குரல்