5 ஆண்டுகளுக்குப் பின் திருப்பதி பயணம்..! 7 கிராமங்களைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்டோர் புறப்பட்டனர்.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள 7 கிராமங்களைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட மக்கள், 5 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தியுடன் புறப்பட்டுச் சென்றனர்.
கீழ்குப்பம், பாப்பானூர், துறையூர், ஆவல்நாயக்கனப்பட்டி, மோட்டூர் உள்ளிட்ட 7 கிராமங்களில் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு இவர்களின் பிரதான தொழிலாக உள்ளது.
இந்த கிராமங்களில் தனிநபராகவோ, குடும்பத்துடனோ திருமலை திருப்பதிக்கு செல்வது தொடர்பாக நீண்ட காலமாக ஒரு அறிவிக்கப்படாத கிராமக் கட்டுப்பாடு இருந்து வருவதாக கூறப்படுகிறது. சுவாமியின் அருள் வந்து அழைப்பு கிடைத்தால் மட்டுமே கிராம மக்கள் அனைவரும் ஒன்றாக திருப்பதிக்கு செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.
அந்த வகையில், சமீபத்தில் பெண் ஒருவருக்கு அருள் வந்து திருப்பதிக்கு வருமாறு கூறியதாகவும், இதையடுத்து கீழ்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட 7 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் 7 பேருந்துகள் மற்றும் கார்கள் மூலம் திருப்பதிக்கு புறப்பட்டுச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புறப்படும் முன் கிராமங்களைச் சுற்றி மேளதாளங்கள் முழங்க, “கோவிந்தா… கோவிந்தா…” என பக்தி முழக்கமிட்டபடி மக்கள் திருப்பதி பயணத்தை தொடங்கினர்.
மேலும், திருப்பதி புனிதப் பயணத்திற்காக ஒவ்வொரு வீட்டிலும் மஞ்சள் துணி கட்டப்பட்ட உண்டியல் வைத்து, சனிக்கிழமைகளில் காணிக்கை செலுத்தி பணம் சேமிப்பது வழக்கமாக இருப்பதாக கூறப்படுகிறது. அந்த சேமிப்பு மற்றும் காணிக்கை பணத்துடன் 5 ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்கள் திருப்பதிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்த பின்னர், மீண்டும் தங்களது கிராமங்களுக்கு திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக்குரல்