கரும்பு லாரியை சூறையாடிய யானைகள்..! தாளவாடியில் வைரல் காட்சி
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் இருந்து சத்தியமங்கலம் பகுதியில் உள்ள கரும்பு ஆலைகளுக்கு, தாளவாடி மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து ஆசனூர், திம்பம் மலைப்பாதை வழியாக லாரிகளில் கரும்பு கொண்டு செல்லப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று இரவு ஆசனூர் அருகே உள்ள காரப்பள்ளம் வனச் சோதனைச்சாவடி பகுதியில் கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரி ஒன்று பழுதாகி நின்றது. இதையடுத்து லாரியை சாலையோரமாக நிறுத்திய ஓட்டுநர் அங்கிருந்து சென்றுள்ளார்.
அப்போது, ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் கூட்டம், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கரும்பு லாரியை கண்டுள்ளது.
கரும்பின் வாசனையை உணர்ந்த யானைகள் லாரியைச் சுற்றி வந்து, அதில் இருந்த கரும்புகளை தங்களது தும்பிக்கையால் ஒவ்வொன்றாக எடுத்து ரசித்து ருசித்து சாப்பிடத் தொடங்கின. சிறிது நேரத்தில் லாரியில் இருந்த கரும்புகளை யானைகள் கூட்டமாக சேர்ந்து சூறையாடியதாக கூறப்படுகிறது.
இந்த சுவாரசியமான காட்சியை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்தக் காட்சிகள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட தாளவாடி–ஆசனூர்–திம்பம் மலைப்பாதையில் கரும்பு ஏற்றிச் செல்லும் வாகனங்களை யானைகள் வழிமறித்து கரும்புகளை சாப்பிடும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.
இதனால், மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக்குரல்