ரூ.6,000 உதவித்தொகை கோரி போராட்டம்..! விழுப்புரத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கைது
விழுப்புரம்:
மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகையை ரூ.6,000 ஆக உயர்த்த வேண்டும் என்றும், உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்து காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உயர்த்தப்படும் என எதிர்பார்த்த நிலையில், பட்ஜெட்டிலும் மானியக் கோரிக்கையிலும் அதற்கான அறிவிப்பு வெளியாகாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
மேலும், தமிழக முதல்வர் விஜய் தேர்தல் அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்குவதாக அறிவித்திருந்ததாக கூறிய அவர்கள், அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் எனக் கோஷங்களை எழுப்பினர்.
சாலையில் அமர்ந்து மறியல்
ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் திடீரென சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்தும், படுத்தும் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து அப்புறப்படுத்தினர்.
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உதவித்தொகையை உயர்த்த வேண்டும் என்றும், ஏற்கெனவே விண்ணப்பித்து காத்திருப்போருக்கு விரைந்து உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக வெற்றிக்குரல்