குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்..! பழனி அருகே பரபரப்பு
பழனி:
பழனி அருகே நாகூர் கிராமத்தில் 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து, 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட நாகூர் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில வாரங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குடிநீர் பிரச்சினையை தீர்க்கக் கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, பொதுமக்கள் பழனி–கோவை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
இதையடுத்து 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் நாகூர் பிரிவு அருகே திரண்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், பெண்களை சாலை மறியலில் ஈடுபடவிடாமல் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, தாளையம் ஊராட்சியின் பிற பகுதிகளுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் வழங்கப்படுவது போன்று நாகூர் பகுதிக்கும் முறையாக குடிநீர் வழங்க வேண்டும் என பெண்கள் வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து ஊராட்சி செயலாளரை அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் விநியோகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பெண்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
“தண்ணீரை விலைக்கு வாங்குகிறோம்” – பெண்கள் வேதனை
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், “நாகூர் கிராமத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் விநியோகம் முறையாக இல்லை. இதனால் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறோம். ஊரில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் மோட்டார்கள் செயல்படாமல் உள்ளன. அவற்றை உடனடியாக சீரமைத்து குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தனர்.
மேலும், நாகூர் பகுதிக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் முறையாக குடிநீர் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலுக்கு திரண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. குடிநீர் விநியோகத்தை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தமிழக வெற்றிக்குரல்