“நிலவு எங்களுக்குத்தான்”..! டிரம்பின் பதிவு உலகளவில் சர்ச்சை!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது Truth Social சமூக வலைதளப் பக்கத்தில் “THE MOON IS OURS” – “நிலவு எங்களுக்குத்தான்” எனப் பதிவிட்டிருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

செப்டம்பர் 6ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்தப் பதிவில், நிலவின் பின்னணியில் அமெரிக்கக் கொடியுடன் கூடிய படம் இடம்பெற்றிருந்தது. ஆனால், இந்தப் பதிவுடன் டிரம்ப் எந்தவிதமான விளக்கத்தையும் அளிக்கவில்லை.

டிரம்பின் பதிவு, அமெரிக்கா நிலவின் மீது உரிமை கோருகிறதா என்ற விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், 1967ஆம் ஆண்டு அமலுக்கு வந்த Outer Space Treaty-யின்படி, நிலவு உள்ளிட்ட விண்வெளிப் பொருட்களை எந்த ஒரு நாடும் தனது இறையாண்மைக்கு உட்பட்டதாகக் கோர முடியாது.

இதற்கிடையே, அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தின் பெயரை “நியூ அமெரிக்கா” என மாற்றலாம் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளதாக மின்னம்பலம் செய்தி குறிப்பிட்டுள்ளது. இந்த யோசனைக்கு நியூ மெக்சிகோ ஆளுநர் மிஷெல் லுஜன் கிரிஷம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மெக்சிகோ வளைகுடாவை “கல்ஃப் ஆஃப் அமெரிக்கா” என அழைப்பது, லேக் ஒன்டாரியோ மற்றும் ஹார்முஸ் நீரிணையின் பெயர்களை மாற்றுவது உள்ளிட்ட டிரம்பின் முந்தைய கருத்துகளும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது “நிலவு எங்களுக்குத்தான்” என்ற பதிவு உலக கவனத்தை ஈர்த்துள்ளது.

Leave a Reply