ரூ.23 கோடி ஏலக்காய் வர்த்தகம் முடக்கம்..! எலிகளால் ஏற்பட்ட விபரீதம்.

தேனி:

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் செயல்பட்டு வரும் ஸ்பைசஸ் வாரியத்தின் மின்னணு ஏல மையத்தில், எலிகள் கணினி மற்றும் இணைய கேபிள்களை சேதப்படுத்தியதால் ஏலக்காய் ஏலம் திடீரென ரத்து செய்யப்பட்டது.

போடிநாயக்கனூர் ஏல மையத்தில் வழக்கம்போல் காலையிலும் பிற்பகலிலும் ஏலக்காய் மின்னணு முறையில் ஏலம் விடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில் காலையில் 54 டன், பிற்பகலில் 19 டன் என மொத்தம் 73 டன் ஏலக்காய் ஏலத்திற்காக பதிவு செய்யப்பட்டிருந்தது. தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏலக்காய் வியாபாரிகளும் ஏலத்தில் பங்கேற்க வந்திருந்தனர்.

ஏலம் தொடங்க இருந்த நிலையில், மையத்தில் இருந்த கணினி மற்றும் இணைய இணைப்பு செயல்படவில்லை. இதையடுத்து தொழில்நுட்ப ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டபோது, கணினி மற்றும் இணைய இணைப்புக்கான கேபிள்களை எலிகள் கடித்து சேதப்படுத்தியிருந்தது தெரியவந்தது.

இதனால் மின்னணு முறையில் ஏலம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து அந்த நாளுக்கான ஏல நடைமுறைகள் ரத்து செய்யப்பட்டதால், ஏலக்காயை விற்பனை செய்ய வந்த விவசாயிகளும், கொள்முதல் செய்ய வந்த வியாபாரிகளும் பாதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தால் சுமார் ரூ.23 கோடி மதிப்பிலான ஏலக்காய் வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மின்னணு ஏல மையத்தின் தொழில்நுட்ப வசதிகளை உடனடியாக சீரமைத்து, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் எலி தடுப்பு மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply