ஆர்ப்பரிக்கும் சுருளி அருவி..! உற்சாகத்தில் சுற்றுலாப் பயணிகள்!
தேனி:
தேனி மற்றும் கம்பம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக, நீண்ட நாட்களாக வறண்டு காணப்பட்ட சுருளி அருவியில் தற்போது நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்யும் மழைநீர் சுருளி அருவிக்கு வந்து சேரும் நிலையில், தொடர் மழையால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டத் தொடங்கியுள்ளது. இதனால் சுருளி அருவியின் இயற்கை அழகு மீண்டும் களைகட்டியுள்ளது.
அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் உற்சாகமடைந்தனர். ஆர்ப்பரித்து கொட்டும் அருவி நீரில் ஆனந்தக் குளியல் மேற்கொண்டு, இயற்கை அழகை ரசித்து மகிழ்ந்தனர்.
விவசாயிகளுக்கும் நம்பிக்கை
சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்திருப்பது சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமின்றி, தேனி மாவட்ட விவசாயிகளுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து மழை பெய்தால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளதாக விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தற்போது தேனி மாவட்டத்தில் மழைக்கான வாய்ப்பு தொடர்வதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தேனி மாவட்ட முன்னறிவிப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக்குரல்